மீன்தொட்டி சுத்தம் செய்யும் போது மின்சாரம் பாய்ந்து13 வயது மாணவன் உயிரிழப்பு!
கோவை பேரூர் அருகே வீட்டில் இருந்த மீன்தொட்டியை ஆசையாகச் சுத்தம் செய்ய முயன்ற 13 வயது பள்ளிச் சிறுவன் ஒருவன், எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
கோவை பேரூர் அடுத்த அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் காளீஸ்வரன் - அங்கம்மாள் தம்பதியினர். இவர்களது மகன் விஷ்வா (13). கோடை விடுமுறை முடிந்து நாளை பள்ளிகள் திறக்கப்படவுள்ள சூழலில், விஷ்வா தற்போது 9-ஆம் வகுப்பிற்குச் செல்லத் தயாராக இருந்துள்ளார். சிறுவன் விஷ்வாவுக்கு சிறு வயது முதலே வீட்டில் மீன்கள் வளர்ப்பதில் அசாத்திய ஆர்வம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இன்று தனது வீட்டில் உள்ள மீன்தொட்டியை சுத்தப்படுத்துவதற்காக சிறுவன் விஷ்வா முடிவு செய்துள்ளார். மீன்தொட்டியில் உள்ள தண்ணீரை வெளியேற்றுவதற்காகவும், தொட்டியைச் சுத்தம் செய்வதற்காகவும் மீன் தொட்டிக்குள் இருந்த சிறிய மின் மோட்டாரை விஷ்வா கைகளால் வெளியே எடுத்துள்ளார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக மின் மோட்டாரை வெளியே எடுக்கும் முன்பாக, அதன் மின் இணைப்பைத் துண்டிப்பதற்கோ அல்லது சுவிட்சை அணைப்பதற்கோ அவர் மறந்துவிட்டதாகத் தெரிகிறது. இதனால் எதிர்பாராத விதமாக மின் மோட்டாரில் இருந்து சிறுவனின் உடலில் மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட விஷ்வா, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த பெற்றோர்கள், விஷ்வாவின் உடலைப் பார்த்து கண்ணீர் விட்டுக் கதறியது பார்ப்போரின் நெஞ்சைக் கலங்கச் செய்தது. இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து வந்த போலீசார், சிறுவனின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
