திருச்சூர் வெடிவிபத்தில் 14 பேர் பலி - பூரம் திருவிழாவில் வாணவேடிக்கை ரத்து!
கேரளாவின் உலகப் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழாவிற்குத் தயாராகி வந்த நிலையில், ஏற்பட்ட கோர வெடிவிபத்து ஒட்டுமொத்தக் கொண்டாட்டத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 14 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, இந்த ஆண்டு விழாவில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு, திருச்சூர் பூரம் திருவிழாவிற்காகப் பட்டாசுகள் மற்றும் வாணவேடிக்கை பொருட்கள் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 14 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். விபத்தின் வீரியம் எந்தளவுக்கு இருந்தது என்றால், உயிரிழந்தவர்களின் 32 உடல் பாகங்கள் மட்டுமே அந்த இடத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளன. மேலும் 14 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்று தேவசம் போர்டு அமைச்சர் வாசவன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்: இன்று ஏப்ரல் 24 மற்றும் வரும் 27-ம் தேதி நடைபெறவிருந்த பிரம்மாண்ட வாணவேடிக்கை நிகழ்ச்சிகள் முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
யானைகள் மீது அமர்ந்து நடத்தப்படும் பிரசித்தி பெற்ற குடைமாற்றம் நிகழ்ச்சி, வழக்கமாக 1 மணிநேரம் நடைபெறும். ஆனால், இந்த முறை அது வெறும் 15 நிமிடங்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும் இந்த ஆண்டு திருச்சூர் பூரம் மிக எளிமையான முறையில் சடங்குகளை மட்டும் நிறைவேற்றும் வகையில் நடத்தப்படவுள்ளது.

வரும் 26-ம் தேதி பூரம் திருவிழா நடைபெறவுள்ள நிலையில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஏற்கனவே திருச்சூரில் குவிந்துள்ளனர். எனினும், பாதுகாப்பு விதிமுறைகளைக் கடுமையாகப் பின்பற்றவும், கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
