தவெக பிரமுகர் பதுக்கி வைத்திருந்த 140 கிலோ குட்கா பறிமுதல் - இருவர் கைது!
திருப்பூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் ஒருவர் குட்கா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளது அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் சட்டவிரோதமாகப் பதுக்கி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாகப் பல்லடம் காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இரகசியத் தகவலின் அடிப்படையில் பல்லடம் அருகே உள்ள குறிப்பிட்ட ஒரு பகுதியில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அங்குப் பெருமளவில் போதைப்பாக்குகள் மறைத்து வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
சோதனையின் போது வணிக ரீதியாகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 140 கிலோ எடையுள்ள குட்கா மற்றும் புகையிலைப் பொருட்களைப் போலீசார் சம்பவ இடத்திலேயே பறிமுதல் செய்தனர். சட்டவிரோதமாக இந்த போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட திருப்பூர் பகுதியைச் சேர்ந்த தினேஷ் செபாஸ்டியன் மற்றும் தவெக உறுப்பினரான பெரியசாமி ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஏற்கனவே விளம்பரத்திற்காக அரசு முகாமில் ரீல்ஸ் எடுத்த நிர்வாகி மீது தவெக தலைமை ஒழுங்கு நடவடிக்கை எடுத்திருந்த நிலையில், அக்கட்சியின் உறுப்பினர் ஒருவர் 140 கிலோ குட்காவுடன் கைதாகியிருப்பது திருப்பூர் மாவட்ட தவெகவினர் இடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
கைது செய்யப்பட்ட பெரியசாமி மற்றும் தினேஷ் செபாஸ்டியன் ஆகிய இருவர் மீதும் தடை செய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தல் தடுப்புச் சட்டத்தின் கீழ் பல்லடம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, இந்த கடத்தலின் பின்னணியில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பிருக்கிறது என்பது குறித்துத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
