140 கி.மீ. வேகம்... ஜப்பானைத் தாக்கும் 'டால்பின்' சூறாவளி - விமான நிலையம் மூடல், மக்கள் முகாம்களில் தஞ்சம்!

 
டால்பின் ஜப்பான்

ஜப்பானின் தென் பகுதியில் உள்ள தீவுகளை நோக்கி 'டால்பின்' சூறாவளிப் புயல் அதிவேகமாக நகர்ந்து வருவதால், ஒகினாவா மாகாணத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. டால்பின் சூறாவளி அச்சுறுத்தல் காரணமாக ஒகினாவா தீவில் உள்ள நாஹா விமான நிலையம் முற்றிலும் மூடப்பட்டுள்ளது. இதனால் அனைத்து உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. டால்பின் சூறாவளி மணிக்கு 144 கி.மீ வேகத்தில் வீசி வருவதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஜப்பான் நிலநடுக்கம் சுனாமி

புயலின் போது வீசிய பலத்த காற்றின் காரணமாக 70 வயதுடைய முதியவர்கள் 3 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒகினாவாவில் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் இருந்து 240 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ஜாங்மி புயல் ஜப்பான்

ஞாயிற்றுக்கிழமை வரை மிகக் கனமழையும் பலத்த காற்றும் தொடரும் என்பதால் பொதுமக்கள் அனைவரும் வீடுகளுக்குள்ளேயே பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தென் ஜப்பானியத் தீவுகளைக் கடந்து நகரும் இந்த டால்பின் சூறாவளி, நாளை மறுநாள் காலையில் சீனாவின் கிழக்குக் கடற்கரைப் பகுதியைச் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.