15 ஆடுகள் பாம்பு கடித்து உயிரிழப்பு... நெல்லையில் சோகம்!

 
ஆடு ஆடுகள்

நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அருகே, இரவில் கிடைக்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்த 15 ஆடுகள் விஷப்பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி விவசாயிகளிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள மேல அரியகுளம், பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் முத்துகிருஷ்ணன், ஆடுகளை வளர்த்து அதன் மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு தனது குடும்பத்தின் வாழ்வாதாரத்தை நடத்தி வருகிறார். வழக்கம்போல் பகலில் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றுவிட்டு, இரவு நேரங்களில் பாதுகாப்பிற்காக மூடப்பட்ட கிடை ஒன்றில் (ஆட்டுப் பட்டி) ஆடுகளை அடைப்பது வழக்கம்.

ஒரே நாளில் சந்தையில் ரூ.80,00,000/- ஆடுகள் விற்பனை!

வழக்கம் போல் இரவில் ஆடுகளைக் கிடைக்குள் அடைத்துவிட்டு முத்துகிருஷ்ணன் தூங்கச் சென்றுள்ளார். பின்னர் நேற்று காலை கிடையை வந்து திறந்தபோது, உள்ளே ஆடுகளும் ஆட்டுக்குட்டிகளும் அசைவற்று இறந்து கிடப்பதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். அப்போது அந்த அடைக்கப்பட்ட இடத்திற்குள்ளிருந்து சுமார் 6 அடி நீளமுள்ள பழுப்பு நிற விஷப்பாம்பு ஒன்று வெளியேறிச் செல்வதைக் கவனித்துள்ளார்.

உள்ளே சென்று சோதனை செய்தபோது, மொத்தம் 15 ஆடுகள் உயிரிழந்திருந்தது தெரியவந்துள்ளது. குறிப்பாக, பிறந்து 20, 30 மற்றும் 35 நாட்களே ஆன பச்சிளம் ஆட்டுக்குட்டிகளும் இதில் பலியாகியுள்ளன. கிடைக்குள் புகுந்த அந்த விஷப்பாம்பு கடித்ததாலேயே ஆடுகள் அனைத்தும் அடுத்தடுத்து உயிரிழந்ததாக முத்துகிருஷ்ணன் கண்ணீருடன் தெரிவித்தார்.

ஆடுகள்

உயிரிழந்த 15 ஆடுகளின் மொத்த மதிப்பு சுமார் 1.5 லட்சம் ரூபாய் இருக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. ஆடு வளர்ப்பையே முழு நம்பகத்தன்மையாகக் கொண்டு வாழ்ந்து வந்த நிலையில், ஒரே இரவில் இத்தனை ஆடுகளை இழந்தது முத்துகிருஷ்ணன் குடும்பத்தினரை மீளாத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த மூலைக்கரைப்பட்டி காவல்துறையினர் உடனடியாக நிகழ்விடத்திற்குச் சென்று விசாரணை நடத்தியதுடன், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.