தனிஷ்க் நகைக் கடையில் 15 கிலோ தங்கம், 3 கிலோ வைர நகைகள் கொள்ளை... கொள்ளையர்களைப் பிடிக்க 9 தனிப்படைகள் அமைப்பு!
மதுரை பைபாஸ் சாலையில் அமைந்துள்ள டாடா நிறுவனத்தின் 'தனிஷ்க்' நகைக் கடையில் நேற்று அதிகாலை நடந்த துணிகரக் கொள்ளைச் சம்பவத்தில், 15 கிலோ தங்க நகைகள் மற்றும் சுமார் 3 கிலோ வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
மதுரை பைபாஸ் பகுதியில் அண்மையில் திறக்கப்பட்ட தனிஷ்க் நகைக் கடையில், நேற்று அதிகாலை 3 மணியளவில் மர்ம நபர்கள் புகுந்து கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. முகமூடி அணிந்த மர்ம நபர்கள் கடையின் பின்புறம் வழியாக உள்ளே நுழைந்து, அங்கிருந்த நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
முன்னதாக இந்தக் கொள்ளையில் ரூ.50 கோடி மதிப்புள்ள 500 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்நிலையில், கடை நிர்வாகம் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், மொத்தம் 15 கிலோ தங்க நகைகள் மற்றும் சுமார் 3 கிலோ வைர நகைகள் கொள்ளை போயிருப்பது தற்போது உறுதியாகியுள்ளது. இந்த கொள்ளைச் சம்பவம் குறித்துக் காவல்துறையினர் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
கொள்ளை நடைபெற்ற நகைக் கடையில் தடய அறிவியல் துறை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் தடயங்களைச் சேகரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
நகைக் கடையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகள் மற்றும் அப்பகுதியில் உள்ள சாலைகளின் கண்காணிப்பு கேமராப் பதிவுகளைக் காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். துணிகரக் கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை விரைந்து பிடிக்க 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, பல்வேறு கோணங்களில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.
