இலங்கை சிறையிலிருந்து 15 தமிழக மீனவர்கள் விடுதலை - 2 படகோட்டிகளுக்கு 3 மாதம் சிறை!

 
மீனவர்கள் மீனவர்கள்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 15 தமிழக மீனவர்களை அந்நாட்டு நீதிமன்றம் நிபந்தனைகளுடன் விடுதலை செய்துள்ளது. அதே சமயம், இரண்டு படகோட்டிகளுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது மீனவக் குடும்பத்தினரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த பிப்ரவரி 19ம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து இரண்டு விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற விமல்ராஜ், தபோன் ராஜா உள்ளிட்ட 12 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று அவர்களது காவல் முடிவடைந்ததை அடுத்து ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

மீனவர்கள்

வழக்கை விசாரித்த நீதிபதி, மீனவர்களின் விடுதலையில் சில கடுமையான நிபந்தனைகளை விதித்தார்: இனி வரும் காலங்களில் மீண்டும் இலங்கை எல்லையில் சிக்கினால் கடுமையான அபராதத்துடன் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் 8 மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர். மீண்டும் பிடிபட்ட 2 மீனவர்களுக்கு தலா ரூ. 7,350 அபராதம் விதிக்கப்பட்டது. எல்லை தாண்டிய விவகாரத்தில் 2 படகோட்டிகளுக்கு தலா 3 மாதம் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடி உத்தரவிட்டார்.

இதே போல், கடந்த மாதம் 26-ஆம் தேதி சசிக்குமார் மற்றும் சிம்சன் ஆகியோரின் படகுகளில் சென்று கைது செய்யப்பட்டிருந்த 7 மீனவர்களும் நேற்று விடுவிக்கப்பட்டனர். இதன் மூலம் மொத்தம் 15 மீனவர்கள் சிறையிலிருந்து வெளியே வந்துள்ளனர்.

அதிர்ச்சி!! தமிழர்களை  சிறை பிடித்த இலங்கை அரசு!! கொந்தளிக்கும் மீனவர்கள்!!

விடுதலையான 15 மீனவர்களும் தற்போது கொழும்புவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். தேவையான சட்ட நடைமுறைகள் மற்றும் பயண ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பிறகு, ஓரிரு நாட்களில் அவர்கள் விமானம் மூலம் தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தங்களது உறவினர்கள் விடுதலையானது மகிழ்ச்சி அளித்தாலும், 2 மீனவர்களுக்குச் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருப்பது ராமேஸ்வரம் மீனவ கிராமங்களில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவ சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.