படகு கவிழ்ந்து விபத்து - நடுக்கடலில் 2 நாட்கள் போராடி உயிர்பிழைத்த 15 வயது சிறுவன்!
அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்திற்கு அருகில் உள்ள பெரிங் கடலில் ஏற்பட்ட படகு விபத்தில், உறவினர்களை இழந்த போதிலும் நடுக்கடலில் 2 நாட்கள் போராடி 15 வயது சிறுவன் உயிர் பிழைத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அலாஸ்கா அருகே உள்ள பெரிங் கடலில் 15 வயது சிறுவன் தனது உறவினர்களுடன் மீன்பிடிக்கச் சென்றபோது, எதிர்பாராதவிதமாக அவர்கள் சென்ற படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் சிறுவனுடன் சென்ற இரண்டு உறவினர்களும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

விபத்தைத் தொடர்ந்து நடுக்கடலில் தவித்த சிறுவன், கவிழ்ந்த படகின் உடைந்த பாகத்தைப் பிடித்துக்கொண்டு சுஅழல் காற்று மற்றும் குளிரையும் பொருட்படுத்தாமல் உயிருக்குத் தீவிரமாகப் போராடியுள்ளான். மறுபுறம் கடலில் காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் அமெரிக்கக் கடலோர காவல் படையினர் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். அப்போது, 2 நாட்களாக நடுக்கடலில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த சிறுவனை அவர்கள் பத்திரமாக மீட்டனர்.
மீட்கப்பட்ட சிறுவனுக்கு உடனடியாக முதலுதவி மற்றும் தேவையான மருத்துவச் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. தற்போது அந்தச் சிறுவனின் உடல்நிலை சீராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
