திருப்பதி வரும் பக்தர்களுக்கு 24 மணி நேரமும் மருத்துவ சேவை - 16 மையங்கள், ஆம்புலன்ஸ் வசதி தயார்!
திருப்பதி ஏழுமலையானைத் தரிசிக்க வரும் லட்சக்கணக்கான பக்தர்களின் உடல்நலப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், திருமலை திருப்பதி தேவஸ்தானம் அதிரடியான மருத்துவச் சேவைகளை விரிவுபடுத்தியுள்ளது. திருமலையில் மட்டும் தற்போது 16 மருத்துவ மையங்கள் பக்தர்களுக்காகச் செயல்பட்டு வருகின்றன. இதில் அஸ்வினி மருத்துவமனை பிரதான மையமாகவும், அதற்குத் துணையாக அப்பல்லோ கார்டியாக் மையமும் (இதய சிகிச்சை) முழுநேரமும் இயங்கி வருகின்றன.

பக்தர்கள் அதிகம் கூடும் இடங்களான வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ், கல்யாணகட்டா, ஸ்ரீவாரி கோவில், நாராயணகிரி ஷெட் மற்றும் அலிபிரி நடைபாதையின் காலிகோபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 24 மணி நேரமும் மருத்துவ உதவி கிடைக்கும். இது தவிர, அன்னப்பிரசாத வளாகம் மற்றும் ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை ஆகிய இடங்களில் குறிப்பிட்ட நேரங்களில் (காலை 8 முதல் இரவு 8 வரை) சேவைகள் வழங்கப்படுகின்றன. அவசரத் தேவைகளுக்காகத் திருமலையில் மட்டும் 9 ஆம்புலன்சுகள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன.
பக்தர்களுக்குத் தடையற்ற சேவை வழங்க 8 மருத்துவர்கள் மற்றும் 120 துணை மருத்துவப் பணியாளர்கள் என மொத்தம் 128 பேர் கொண்ட குழு சுழற்சி முறையில் பணியில் உள்ளனர். தினசரி சராசரியாக 2,400 பக்தர்கள் இந்த மருத்துவச் சேவைகளைப் பயன்படுத்தி வருகின்றனர். அஸ்வினி மருத்துவமனையில் இ.சி.ஜி, எக்ஸ்-ரே, லேப் பரிசோதனை மற்றும் ஆக்சிஜன் உதவி போன்ற அனைத்து நவீன வசதிகளும் உள்ளன. மேல் சிகிச்சை தேவைப்படும் பக்தர்கள் திருப்பதியில் உள்ள சுவிம்ஸ் (SWIMS) அல்லது ருயா மருத்துவமனைக்குத் தேவஸ்தான செலவிலேயே இலவசமாக அழைத்துச் செல்லப்படுவார்கள்.

திருவிழாக் காலங்களில் கூடுதல் நடமாடும் மருத்துவ மையங்கள் அமைக்கப்படும் என்றும், பக்தர்களின் பாதுகாப்பே தங்களின் முதல் முன்னுரிமை என்றும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இனி திருமலைக்குச் செல்லும் பக்தர்கள் உடல்நலக் குறைவு ஏற்பட்டால் எவ்வித அச்சமுமின்றி இந்த இலவச சேவைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
