பள்ளி வளாகத்தில் ஆசிரியை கழுத்தில் இருந்த 16 சவரன் நகை பறிப்பு ... பெரும் பரபரப்பு!

 
செயின்

தூத்துக்குடி அருகே உள்ள அத்திமரபட்டியில் மாநகராட்சி அரசு நடுநிலைப்பள்ளி ஒன்று  செயல்பட்டு  வருகிறது. இந்தப் பள்ளியில் சாந்தி என்பவர் ஆசிரியையாகப் பணிபுரிந்து  வருகிறார். இந்நிலையில் நேற்று மதியம் இடைவேளையின் போது ஆசிரியை சாந்தி பள்ளியில் உள்ள கழிப்பறைக்குச் சென்றுள்ளார். அப்போது அங்கு ஏற்கனவே மறைந்திருந்த மர்ம நபர் ஒருவர் திடீரென ஆசிரியை பாய்ந்து தாக்கியுள்ளான்.

ஆசிரியையிடம் தங்க செயின் பறிப்பு

ஆசிரியையின் கழுத்தில் அணிந்திருந்த 16 சவரன் மதிப்புள்ள தங்க தாலிச் செயினை அந்த மர்ம நபர் பலவந்தமாகப் பறித்துள்ளான். பறிக்கப்பட்ட இந்தத் தங்கச் செயினின் மதிப்பு சுமார் 20 லட்சம் ரூபாய் வரை இருக்கும் எனக் கூறப்படுகிறது. திடீர் தாக்குதலால் அதிர்ச்சியடைந்த ஆசிரியை சாந்தி கூச்சலிட்டு அலறியுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு சக ஆசிரியர்களும் ஊழியர்களும் பதறியடித்துக் கொண்டு சம்பவ இடத்திற்கு ஓடி வந்தனர்.

போலீஸ்

மற்றவர்கள் ஓடி வருவதற்குள் அந்த மர்ம நபர் அருகிலிருந்த வாழைத் தோட்டத்திற்குள் புகுந்து மின்னல் வேகத்தில் தப்பியோடிவிட்டான். இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். பள்ளி வளாகத்திலேயே ஆசிரியை தாலிச் செயின் பறிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.