திருவள்ளூரில் 16 வயது மாணவிக்கு திருமணம் - மண்டபத்தில் புகுந்து காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை!

 
திருமண மண்டபம் சிறார் சிறுமி திருமணம் ரகசிய

திருவள்ளூர் மாவட்டத்தில் 16 வயது சிறுமிக்கு நடைபெற்ற குழந்தைத் திருமணம் குறித்துத் தகவலறிந்த காவல்துறையினர், வரவேற்பு நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த போதே மண்டபத்தில் புகுந்து அதனைத் தடுத்து நிறுத்தினர்.

திருவள்ளூர் மாவட்டம் குமரஞ்சேரி முருகன் கோவிலில் 16 வயது சிறுமிக்கும், 24 வயது இளைஞருக்கும் நேற்று காலை திருமணம் நடந்துள்ளது. அதன் பின்னர் நேற்று மாலையில் தனியார் திருமண மண்டபம் ஒன்றில் வரவேற்பு நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்று கொண்டிருந்த போது, மணப்பெண் மைனர் சிறுமி என்ற தகவல் காவல்துறையினருக்குக் கிடைத்தது.

உடனடியாக நிகழ்விடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சம்பந்தப்பட்ட ஆவணங்களைச் சரிபார்த்ததில், சிறுமிக்கு 16 வயதே ஆவது உறுதியானது. இதனையடுத்து வரவேற்பு நிகழ்ச்சி பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

இது குறித்து பின்னர் குழந்தைகள் நல அலுவலர் அளித்த அதிகாரப்பூர்வ புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.