தமிழகம் உட்பட நாடு முழுவதும் 17 மாநிலங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த வாய்ப்பு - இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
தமிழ்நாடு உள்ளிட்ட 17 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன்படி, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது, நீக்குவது மற்றும் திருத்தங்கள் மேற்கொள்வதற்கான தேதிகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன.

வரும் நவம்பர் 12-ஆம் தேதிக்குள் வாக்குப்பதிவு மையங்களைச் சீரமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டு, அன்றைய தினம் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். நவம்பர் 12 முதல் டிசம்பர் 11 வரை பொதுமக்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் முகவரி/விவரத் திருத்தங்களுக்கு விண்ணப்பிக்கலாம். பெறப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, தமிழ்நாடு உள்பட 17 மாநிலங்களில் 2027 ஜனவரி 4-ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.
ஒரு வாக்குப்பதிவு மையத்தில் 1,200 வாக்காளர்களுக்கு மேல் இருக்கக்கூடாது என்பதை உறுதி செய்யும் வகையில் வாக்குச்சாவடிகள் சீரமைக்கப்படவுள்ளன. ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களும், ஒரே கதவு எண் கொண்டவர்களும் வாக்காளர் பட்டியலில் ஒரே பிரிவில் இடம்பெறுவது உறுதி செய்யப்படும்.

தகுதியான அனைத்து நபர்களும் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்களைச் சேர்ப்பதை சம்பந்தப்பட்ட தேர்தல் அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
