பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்து 17 மாணவர்கள், ஆசிரியை பலி; 40 பேர் படுகாயம் - பாகிஸ்தான் பெஷாவரில் கோர விபத்து!

 
பாகிஸ்தான் பள்ளி மேற்கூரை

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் அமைந்துள்ள தனியார் பள்ளி ஒன்றின் கட்டிடம் மற்றும் கூரை திடீரென இடிந்து விழுந்த கோர விபத்தில், 13 வயதுக்கு உட்பட்ட 17 சிறுவர்களும் ஒரு ஆசிரியையும் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவத்தில் 40-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ள நிலையில், மீட்புப் பணிகள் மற்றும் தீவிர சிகிச்சைகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன.

பாகிஸ்தானின் பெஷாவர் நகரப் பகுதியில் உள்ள திர் காலனி பகுதியில் இயங்கி வந்த தனியார் பள்ளி ஒன்றில் வழக்கம்போல் வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அப்போது எதிர்பாராதவிதமாகப் பள்ளிக் கட்டிடத்தின் கூரை திடீரென முழுமையாக இடிந்து விழுந்தது. இந்த திடீர் விபத்தில் வகுப்பறையில் அமர்ந்து கல்வி பயின்று கொண்டிருந்த மாணவ-மாணவிகள் அனைவரும் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர்.

இந்தச் சம்பவம் குறித்துத் தகவலறிந்ததும் பெஷாவர் தலைநகர் காவல் துறைத் தலைவர் மியான் சயீத் மற்றும் மீட்புப் படையினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இடிபாடுகளில் சிக்கியுள்ள பச்சிளம் குழந்தைகளையும் பள்ளி ஊழியர்களையும் மீட்கும் பணியில் உள்ளூர் மக்களுடன் இணைந்து மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இடிபாடுகளில் சிக்கிப் படுகாயமடைந்த மாணவ-மாணவிகள் மீட்கப்பட்டு அருகில் உள்ள லேடி ரீடிங் மருத்துவமனைக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு அந்த மருத்துவமனையில் அவசர நிலை பிரகடனம்   அமல்படுத்தப்பட்டுள்ளது. மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்ட காயமடைந்த குழந்தைகளுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

பள்ளிக் கூரை திடீரெனச் சரிந்து விழுந்ததில் இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான பிஞ்சுச் சிறார்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குப் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். மேலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள காயமடைந்த குழந்தைகளுக்கு உரிய மற்றும் சிறந்த மருத்துவ சிகிச்சைகளை உடனே வழங்க அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.