பகீர் வீடியோ... அணித் தோல்வியை நையாண்டி செய்ததால் விபரீதம்... 17 மாணவர்கள் மீது மின்சாரக் கம்பியால் கொடூரமாகத் தாக்கிய ஆசிரியர்!
வங்காளதேசம் நவகாவுன் சதர் உபஜிலாவில் இயங்கி வரும் நர்ச்சி அரசு தொடக்கப் பள்ளியில் உதவி ஆசிரியராகப் பணியாற்றி வருபவர் அப்துஸ் சலாம். இப்பள்ளியில் வகுப்பறை இடைவேளையின் போது, அர்ஜென்டினா கால்பந்து அணி தோல்வியடைந்ததைக் குறித்து மாணவர்கள் சிலர் நையாண்டிப் பாடல் பாடியுள்ளனர். அர்ஜென்டினா அணியின் தீவிர ரசிகரான ஆசிரியர் அப்துஸ் சலாம், இதனால் கடும் ஆத்திரமடைந்து வகுப்பில் இருந்த 17 மாணவர்களை மின்சாரக் கம்பியால் கொடூரமாகத் தாக்கியுள்ளார். சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் உட்பட 17 பேரை அவர் இரக்கமின்றித் தாக்கிய இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
மாணவர்கள் மீதான இந்தக் கொடூரத் தாக்குதல் குறித்த செய்தி பரவியதை அடுத்து, பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களும் கிராம மக்களும் கொதித்தெழுந்தனர். ஆசிரியர் அப்துஸ் சலாம் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கக் கோரி, 'நர்ச்சி மோட்' பகுதியில் திரண்ட பொதுமக்கள் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவத்திற்குக் காரணமான ஆசிரியர் மீது உரிய விசாரணை நடத்தப்பட்டு, அவருக்கு முன்மாதிரியான கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் எனக் கிராம மக்கள் வலியுறுத்தினர். தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு ஆசிரியர் மன்னிப்பு கோரிய போதிலும், மக்கள் தங்களது போராட்டத்தைக் கைவிடாமல் தீவிரப்படுத்தி வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்துப் பேசிய மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர், பாதிக்கப்பட்ட தரப்பிலிருந்து முறையான எழுத்துப்பூர்வ புகார் பெறப்பட்டவுடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். சம்பந்தப்பட்ட உதவி ஆசிரியர் மீது சட்டப்பூர்வமான நிர்வாக நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்படும் என அவர் உறுதியளித்துள்ளார். பள்ளி வகுப்பறையிலேயே நடந்த இந்த வன்முறைச் சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் பெரும் பரப்பரப்பை உருவாக்கியுள்ளது.
