டெல்லியில் தடியடி, கண்ணீர் புகைக்குண்டு வீச்சில் 178 பேர் காயம்!

 
டெல்லி நீட்

நீட் தேர்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி, டெல்லியில் நடைபெற்ற 'சலோ சன்சத்' நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியில் பெரும் வன்முறை வெடித்தது. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர், பல்வேறு மாணவர் அமைப்புகள் மற்றும் இளைஞர்கள் திரண்டு நடத்திய இந்தப் பேரணியைத் தடுக்கக் காவல்துறையினர் நடத்திய அதிரடி நடவடிக்கையால் அப்பகுதியே போர்க்களமாக மாறியது.

ஜந்தர் மந்தரில் இருந்து நாடாளுமன்றம் நோக்கிப் பேரணியாகச் செல்ல முயன்ற போராட்டக்காரர்களைத் தடுக்கத் தற்காலிகத் தடுப்புகளைக் (Barricades) காவல்துறையினர் அமைத்திருந்தனர். போராட்டக்காரர்கள் தடுப்புகளைத் தாண்டிச் செல்ல முயன்ற போது, காவல்துறையினர் தொடர்ச்சியாகத் தடியடி நடத்தியதுடன் கண்ணீர் புகைக்குண்டுகளையும் வீசி எறிந்தனர். இந்த மோதலில் 118 காவல்துறையினர் உட்பட மொத்தம் 178 பேர் பலத்த காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

டெல்லி

அமைதியான முறையில் நடைபெற்ற பேரணியின் மீது காவல்துறை வன்முறையைப் பிரயோகித்ததாகக் குற்றம் சாட்டிய நிலையில், அமைப்பின் நிறுவனர் அபிஜீத் திப்கே உட்பட 70 போராட்டக்காரர்களைக் காவல்துறையினர் கைது செய்து காவலில் வைத்தனர். இந்தப் பேரணியில் பிரபல முன்னணி நடிகர் மற்றும் சமூக ஆர்வலரான பிரகாஷ் ராஜ், மூத்த நடிகை ஷபானா ஆஸ்மி உள்ளிட்ட பலர் நேரடியாகக் கலந்து கொண்டு மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

அரசியலமைப்புச் சட்டத்துடன் பிரகாஷ் ராஜ்: பேரணியின் போது இந்திய அரசியலமைப்புச் சட்டப் புத்தகத்தைக் கையில ஏந்தியபடி உரையாற்றிய பிரகாஷ் ராஜ், "மாணவர்கள் நீதி கேட்கும் போது திரைத்துறையினர் அமைதியாக இருக்கக் கூடாது; உண்மைக்காகப் பேசுவதற்கு நாம் பயப்படக் கூடாது" எனப் பேசினார்.

டெல்லி

ஜந்தர் மந்தரில் நீடிக்கும் போராட்டம்: அடக்குமுறைகள் மற்றும் கைது நடவடிக்கைகளுக்கு மத்தியிலும், வழக்க ஆர்வலர் சோனம் வாங்சுக், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோரின் ஆதரவுடன் ஜந்தர் மந்தரில் போராட்டக்காரர்கள் தொடர்ந்து விடிய விடிய அமர்ந்து தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர்