பள்ளி மைதானத்தில் 1,800 ஆண்டுகள் பழமையான மண்பாண்டங்கள் கண்டெடுப்பு - திருப்பூரில் ஆய்வு செய்ய திட்டம்!

 
அகழ்வாராய்ச்சி மண்பாண்டம் தொல்லியல்

திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள சேவூர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் விளையாடிய மாணவர்களின் காலில் தட்டுப்பட்ட மண்பாண்டங்கள் சுமார் 1,800 ஆண்டுகள் பழமையானவை எனத் தொல்லியல் துறையினர் கண்டறிந்துள்ளனர். 

கொங்கு மண்டலத்தின் தொன்மையான வரலாற்றைக் கொண்ட அவினாசி பகுதியில், அவ்வப்போது பழங்கால நடுகற்கள் மற்றும் முதுமக்கள் தாழிகள் போன்ற தொல்லியல் சான்றுகள் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சேவூர் அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் மாணவர்கள் கபடி விளையாடிக் கொண்டிருந்தபோது, ஒரு மாணவரின் காலில் மண் ஓடு போன்ற பொருள் தட்டுப்பட்டுள்ளது. 

இதையடுத்து அந்தப் பகுதியைச் சுற்றியுள்ள மண்ணைத் தோண்டிப் பார்த்தபோது அங்கு மண்பாண்டம் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்துத் திருப்பூர் தொல்லியல் துறை அலுவலர் ஜெயபிரியா மற்றும் பொறுப்பாளர் சுந்தரகணேஷ் ஆகியோருக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மேற்கொண்டு மண்ணைத் தோண்டிச் சோதித்தபோது, அங்கு மேலும் ஒரு மண்பாண்டம் என மொத்தம் 2 மண்பாண்டங்கள் கண்டெடுக்கப்பட்டன.

திருப்பூர்

கண்டெடுக்கப்பட்ட இரண்டு மண்பாண்டங்களும் மிக நேர்த்தியான கலைநயத்துடன் செய்யப்பட்டுள்ளன. இவற்றை ஆய்வு செய்த தொல்லியல் துறையினர், இவை சுமார் 1,800 ஆண்டுகள் பழமையானவையாக இருக்கக்கூடும் எனக் கருதுகின்றனர். பண்டைய காலத்தில் முன்னோர்கள் உயிரிழந்தவர்களின் நினைவாகவும் அடையாளமாகவும் இதுபோன்ற கலயங்களைப் பயன்படுத்தியுள்ளனர். 

மேலும், இறந்தவர்களுடன் அவர்கள் வாழ்ந்த காலத்தில் பயன்படுத்திய பொருட்கள் மற்றும் உணவு தானியங்களை மண்பாண்டங்களில் வைத்துப் புதைக்கும் வழக்கம் அக்காலத்தில் இருந்ததன் அடிப்படையில், தற்போது கிடைத்துள்ள மண்பாண்டங்கள் அப்பகுதியில் பண்டைய காலத்தில் மனித நாகரிகம் செழித்து வாழ்ந்ததற்கான முக்கியச் சான்றுகளாகக் கருதப்படுகின்றன.

இதனைத் தொடர்ந்து, சேவூர் அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் மேலும் ஐந்துக்கும் மேற்பட்ட இடங்கள் குறியீடு செய்யப்பட்டுள்ளன. அந்த இடங்களிலும் மண்ணைத் தோண்டி முறையான ஆய்வுகளை மேற்கொள்ளத் தொல்லியல் துறையினர் திட்டமிட்டுள்ளனர். இதன் மூலம் இப்பகுதியின் பழங்கால வரலாறு குறித்த மேலும் பல புதிய தகவல்கள் வெளிவர வாய்ப்புள்ளது.

பண்டைய காலத்தில் சேவூர் பகுதி தங்கக் காசுகள் அச்சடிக்கப்பட்ட இடமாக இருந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும், இந்தப் பள்ளிக்கு அருகிலேயே ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமையான அறம்வளர்த்த நாயகி உடனமர் வாலீஸ்வரர் கோவில் மற்றும் கல்யாண வெங்கட்ரமண பெருமாள் கோவில் ஆகியவை அமைந்துள்ளன. இக்கோவில்களில் இருந்து அவினாசி லிங்கேஸ்வரர் கோவிலுக்குச் செல்லும் வகையில் சுரங்கப்பாதைகள் இருந்ததாகவும் முன்னோர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், சேவூரில் தற்போது கிடைத்துள்ள மண்பாண்டங்கள் உள்ளிட்ட தொல்லியல் தடயங்களை விரிவாக ஆய்வு செய்து, இப்பகுதியின் உண்மையான வரலாற்றை முழுமையாக வெளிக்கொணர வேண்டும் என வரலாற்று ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.