கோடை விடுமுறை... நாடு முழுவதும் 18,262 சிறப்பு ரயில்கள் இயக்கம்!

 
 சிறப்பு ரயில்  சிறப்பு ரயில்

கோடை விடுமுறை மற்றும் பயணிகளின் கடும் நெரிசலைக் கருத்தில் கொண்டு, நாடு முழுவதும் மொத்தம் 18,262 கோடைகால சிறப்பு ரயில்களை இயக்கப்போவதாக ஒன்றிய ரயில்வே அமைச்சகம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  ஜூலை 15 ஆம் தேதி வரை இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதால், வெளியூர் செல்லத் திட்டமிட்டுள்ள பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். ஏப்ரல் 15 முதல் ஜூலை 15 வரையிலான உச்சக்கட்டப் பயணக் காலத்தை முன்னிட்டு, பயணிகளுக்குத் தடையற்ற போக்குவரத்தை உறுதி செய்வதே இந்த மெகா திட்டத்தின் நோக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் டிக்கெட் புக்கிங்

ரயில்வே துறையின் இந்த விரிவான திட்டத்தில், முதற்கட்டமாக 11,878 பயணங்கள் முறைப்படி அறிவிக்கப்பட்டு அதற்கான முன்பதிவுகளும் விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ளன. மீதமுள்ள ரயில் சேவைகளும் பயணிகளின் தேவையைப் பொறுத்து உடனுக்குடன் அறிவிக்கப்பட்டு வருவதால், காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை கிடைக்கும் எனத் தெரிகிறது. முக்கிய வழித்தடங்களில் நிலவும் கூட்ட நெரிசலைக் குறைக்கவும், பயணிகள் சிரமமின்றிப் பயணிக்கவும் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் ரயில்வே நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது.

ரயில்

பயணிகளின் வசதிக்காகக் கூடுதல் ரயில் பெட்டிகளை இணைத்தல் மற்றும் பயண நேரத்தைக் குறைப்பதற்கான நுணுக்கமான திட்டமிடல்களை ரயில்வே அமைச்சகம் செயல்படுத்தியுள்ளது. குறிப்பாகத் தென்னக ரயில்வே உள்ளிட்ட அனைத்து மண்டலங்களிலும் சிறப்பு ரயில்கள் குறித்த தகவல்கள் உடனுக்குடன் பதிவேற்றப்பட்டு வருகின்றன. கோடை காலத்தின் வெப்பத்தைச் சமாளிக்கும் வகையில் குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகளையும் ரயில் நிலையங்களில் மேம்படுத்த அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்த அறிவிப்பு காரணமாகச் சுற்றுலா மற்றும் சொந்த ஊர்களுக்குச் செல்லும் நடுத்தர மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.