பாஜகவின் 30 ஆண்டு காலக் கோட்டை தகர்ப்பு - பீகார் பாங்கிபூர் இடைத்தேர்தலில் 19,324 வாக்குகள் வித்தியாசத்தில் பிரசாந்த் கிஷோர் வெற்றி!
பீகார் மாநிலம் பாங்கிபூர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில், பாஜக வேட்பாளரை வீழ்த்தி ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் தனது முதல் நேரடித் தேர்தலில் பிரம்மாண்ட வெற்றி பெற்றுள்ளார்.
கடந்த 1995-ம் ஆண்டு முதல் பாஜகவின் அசைக்க முடியாத கோட்டையாக விளங்கிய பாங்கிபூர் தொகுதியை, ஜன் சுராஜ் கட்சி முதன்முறையாகக் கைப்பற்றியுள்ளது.
பிரசாந்த் கிஷோர் (ஜன் சுராஜ்) 64,151 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். நீரஜ் குமார் சின்ஹா (பாஜக) 44,827 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்தார். பிரசாந்த் கிஷோர் பாஜக வேட்பாளரை விட 19,324 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி அடைந்துள்ளார். பிரதான எதிர்க்கட்சியான ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் வேட்பாளர் ரேகா குப்தா (ஆர்.ஜே.டி) 14,273 வாக்குகள் மட்டுமே பெற்று மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டார்.

பல்வேறு முன்னணி அரசியல் கட்சிகளுக்குத் தேர்தல் வியூக வகுப்பாளராகப் பணியாற்றிய பிரசாந்த் கிஷோர், நேரடியாகக் களம் கண்ட முதல் தேர்தலிலேயே சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வாகியுள்ளார்.
2025 பீகார் சட்டமன்றப் பொதுத்தேர்தலில் ஒரு இடத்தைக் கூட வெல்ல முடியாத நிலையில், இந்த இடைத்தேர்தல் வெற்றி பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சிக்கு மிகப்பெரிய அரசியல் திருப்புமுனையாகவும், ஆளும் பாஜகவுக்குப் பெரும் அதிர்ச்சியாகவும் அமைந்துள்ளது.
