1,98,000 சதுரடி பரப்பளவு, ரூ.300 கோடி மதிப்பு.. கோவையில் 'தந்தை பெரியார் அறிவுலகம்' - 16ம் தேதி முதல்வர் விஜய் திறந்து வைக்கிறார் - என்னென்ன வசதிகள் தெரியுமா?!

 
பெரியார் அறிவுலகம் கோவை

கோவையில் சுமார் ரூ.300 கோடி மதிப்பீட்டில் அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள 'தந்தை பெரியார் அறிவுலகம்' நூலகம் மற்றும் அறிவியல் மையம் வரும் அக்டோபர் 16-ம் தேதி அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்பட உள்ளது. இத்திறப்பு விழாவில் தமிழக முதலமைச்சர் விஜய் நேரில் கலந்துகொண்டு நூலகத்தைத் திறந்து வைக்க உள்ளார்.

கோவை காந்திபுரம் நஞ்சப்பா சாலையில், டவுன் பேருந்து நிலையம் அருகில் உள்ள சிறைத்துறைக்குச் சொந்தமான 7 ஏக்கர் பரப்பளவில் இந்த அறிவுசார் மையம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக மொத்தம் ரூ.300 கோடி செலவிடப்பட்டுள்ளது; இதில் ரூ.245 கோடி கட்டுமானப் பணிகளுக்கும், ரூ.50 கோடி புத்தகங்கள் வாங்குவதற்கும், ரூ.5 கோடி இ-புத்தகங்கள் வாங்குவதற்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், நூலக வளாகத்தில் பெரியாரின் திருவுருவச் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது.

முதல்வர் விஜய் பயணம் வெளிநாடு புறப்பாடு வருகை

இப்பெரியார் நூலகம் 1 லட்சத்து 98 ஆயிரம் சதுர அடி பரப்பளவில், தரைத்தளம் மற்றும் 7 தளங்களுடன் 'A' மற்றும் 'B' என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக நூலகம், 350 பேர் அமரக்கூடிய அரங்கம், அறிவியல் உபகரணங்கள் கொண்ட அறிவியல் மையம், கோளரங்கம் மற்றும் விண்வெளியைக் கண்டுகளிக்கும் வசதிகள்.

சொந்தமாகப் புத்தகம் கொண்டு வந்து படிப்போருக்கான பகுதி, சிறுவர்களுக்கான நூலகம், போட்டித் தேர்வு பயிற்சி மையம், வரலாற்றுப் புத்தகங்கள் மற்றும் தமிழ்/ஆங்கில நூல்கள் பிரிவு. ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையிலான இன்குபேஷன் சென்டர்கள், ஆங்கிலம் கற்கும் பிரிவு மற்றும் அதிநவீன டிஜிட்டல் நூலகம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

தந்தை பெரியார் அறிவுலகம் கோவை

வரும் 16-ஆம் தேதி நடைபெறும் திறப்பு விழாவில் பங்கேற்பதற்காகத் தமிழக முதலமைச்சர் விஜய் சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வருகை தருகிறார். விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் காந்திபுரத்தில் உள்ள பெரியார் நூலக வளாகத்திற்கு வரும் அவர், பெரியார் சிலையையும் நூலகத்தையும் திறந்து வைத்துப் பார்வையிடுகிறார்.

நூலக வளாகத்தில் இதற்காகப் பிரம்மாண்ட விழா மேடை அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொள்ள உள்ளனர்.