அமெரிக்காவில் பெற்றோர், பாட்டியைச் சுட்டுக்கொன்ற 19 வயது இந்திய வம்சாவளி இளைஞர் கைது!
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில், தனது பெற்றோர், பாட்டி மற்றும் தம்பி ஆகியோர் மீது 19 வயது இந்திய வம்சாவளி இளைஞர் ஒருவர் துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டுக் கொலை வெறித் தாக்குதல் நடத்தியுள்ளார். இந்த சம்பவத்தில் பெற்றோர் மற்றும் பாட்டி உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தப்பியோட முயன்ற அந்த இளைஞரை அமெரிக்கப் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட ஸ்விரா ராம் (56) என்பவர், தனது மனைவி ராணி (46), இரண்டு மகன்கள் மற்றும் தனது தாயாரான மிந்திர் கவுர் (73) ஆகியோருடன் டெக்சாஸில் பல ஆண்டுகளாக வசித்து வந்தார். நேற்று இவர்களது வீட்டிற்குள் திடீரெனப் பெரும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஸ்விரா ராமின் மூத்த மகனான சோப்ரா (19), ஆத்திரத்தில் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்துத் தனது குடும்ப உறுப்பினர்கள் மீது மிக நெருக்கமான தொலைவிலிருந்து சரமாரியாகச் சுட்டுத் தாக்குதல் நடத்தினார்.
சோப்ரா நடத்திய இந்த துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில், தோட்டாக்கள் உடலில் பாய்ந்து அவரது தந்தை ஸ்விரா ராம், தாய் ராணி மற்றும் பாட்டி மிந்திர் கவுர் ஆகிய 3 பேரும் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். இத்தாக்குதலில் சோப்ராவின் தம்பிக்கு கடுமையான துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் ஏற்பட்டுள்ளன. அண்டை வீட்டாரின் அவசரத் தகவலின் பேரில் அங்கு விரைந்து வந்த மீட்புக் குழுவினர், உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அந்தச் சிறுவனை மீட்டு அருகில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துள்ளனர். அவனது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டை நடத்திய பின்னர், சோப்ரா தனது வீட்டிற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த காரை எடுத்துக் கொண்டு தப்பியோட முயன்றார். துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டு அப்பகுதியைச் சூழ்ந்த ஹிடல்கோ பிரிவு போலீசார், தப்பியோட முயன்ற சோப்ராவின் காரைச் துரத்திச் சென்று நாற்புறமும் வளைத்துப் பிடித்தனர். காரில் இருந்த சோப்ராவைக் கைது செய்த போலீசார், அவரிடமிருந்த கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர்.
சொந்தக் குடும்ப உறுப்பினர்களையே 19 வயது இந்திய வாலிபர் சுட்டுக்கொன்ற இந்தச் கொடூரச் சம்பவம் அமெரிக்காவில் வாழும் இந்தியச் சமூகத்தினர் மத்தியிலும், உள்ளூர் பகுதியிலும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலுக்கான காரணம் என்ன, குடும்பத் தகராறா அல்லது மனநலப் பாதிப்பா என்ற கோணத்தில் ஹிடல்கோ மாவட்டக் காவல் துறையினர் மற்றும் மத்தியப் புலனாய்வு அமைப்புகள் தீவிரமாகப் புலனாய்வு செய்து வருகின்றனர்.
