பேருந்து நிலையத்தில் பெண்ணிடம் அத்துமீறல் - தவெக ஒன்றிய செயலாளர் உட்பட 2 பேர் கைது!
திருவாரூர் பேருந்து நிலையத்தில் இளம்பெண் ஒருவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக, தவெக ஒன்றிய செயலாளர் ஆனந்த் மற்றும் அவரது நண்பர் அசோக் ஆகிய இருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க அரசு பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வரும் வேளையில், ஆளுங்கட்சி நிர்வாகி ஒருவரே இத்தகைய புகாரில் கைது செய்யப்பட்டிருப்பது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட இளம்பெண், திருவாரூர் பேருந்து நிலையத்தில் தனது தந்தைக்காகக் காத்துக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அந்த சமயத்தில் அங்கு வந்த தவெக ஒன்றிய செயலாளர் ஆனந்த் மற்றும் அவரது நண்பர் அசோக் ஆகியோர், அந்த பெண்ணிடம் அத்துமீறி அவதூறான வார்த்தைகளால் பேசி, ஈவ்டீசிங் தொந்தரவு கொடுத்ததாகத் தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண், பேருந்து நிலையப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசாரிடம் உடனடியாகப் புகார் அளித்தார்.
பெண்ணின் புகாரைத் தொடர்ந்து விரைந்து செயல்பட்ட திருவாரூர் நகரப் போலீசார், சம்பவ இடத்திலேயே இருந்த ஆனந்த் மற்றும் அசோக் ஆகிய இருவரையும் பிடித்துக் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். விசாரணையில் குற்றம் உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவர்கள் மீது பெண்களைத் துன்புறுத்துதல் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, முறைப்படி கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க, தவெக அரசு சமீபத்தில் "சிங்கப்பெண் சிறப்பு படை" என்ற பிரத்தியேகக் காவல் பிரிவை அமைத்து தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது. இன்று காலையில்கூட சட்டப்பேரவையில் ஆற்றிய ஆளுநர் உரையில், "பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்குக் கடுமையான தண்டனை பெற்றுத்தர அரசு தனி கவனம் செலுத்தி வருகிறது" என்று உறுதி அளிக்கப்பட்டிருந்தது.
இத்தகைய கடுமையான உத்திகளுக்கு மத்தியிலும், ஆளும் கட்சியைச் சேர்ந்த பிரமுகர்களே பெண்களிடம் அத்துமீறும் சம்பவங்களில் அடிக்கடி சிக்கி வருவது, அரசின் சட்டம்-ஒழுங்கு மற்றும் பாதுகாப்புப் பிரசாரங்களுக்குப் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. இச்சம்பவம் குறித்து தவெக தலைமை என்ன மாதிரியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
