நீச்சல் பழகச் சென்ற 2 சிறுவர்கள் ஏரியில் மூழ்கி பலியான துயரம்!

 
ஆற்றில் மூழ்கி

கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டம் சாகர் தாலுகா அருகே உள்ள ஏரியில் நீச்சல் பழகச் சென்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிவமொக்கா மாவட்டம் சாகர் தாலுகா ஆலஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த லேகன் (13) மற்றும் புனித் (11) ஆகிய இருவரும் அந்தப் பகுதியில் உள்ள பள்ளியில் முறையே 6 மற்றும் 5-ஆம் வகுப்பு படித்து வந்தனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால், லேகன் மற்றும் புனித் ஆகிய இருவரும் தங்களது கிராமத்திற்கு அருகில் உள்ள ஒசாகெரே ஏரிக்கு நீச்சல் பழகச் சென்றுள்ளனர். அப்போது கரையோரமாக நீச்சல் பழகத் தொடங்கிய அவர்கள், நீச்சல் சரியாகத் தெரியாததால் எதிர்பாராதவிதமாக ஏரியின் ஆழமான பகுதிக்குச் சென்றுள்ளனர்.

மூழ்கி பலி

ஆழமான பகுதிக்குச் சென்றதால் அவர்களால் நீந்தி வெளியே வரமுடியவில்லை; இதனால் தண்ணீரில் மூழ்கி இரு சிறுவர்களும் பரிதாபமாக உயிரிழந்தனர். சிறுவர்கள் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் ஏரிப்பகுதிக்குச் சென்று தேடியுள்ளனர்.

அப்போது ஏரியில் சிறுவர்களின் உடல்கள் மிதப்பதைக் கண்டு கதறி அழுத அவர்கள், உடனடியாகச் சாகர் புறநகர் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் உதவியுடன் சிறுவர்களின் உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காகச் சாகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விடுமுறை நாளில் சந்தோஷமாக இருக்கச் சென்ற சிறுவர்கள் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இச்சம்பவம் அந்த கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.