பெரும் சோகம்... மின் மாற்றியில் சிக்கிய நுங்கை எடுக்க முயன்ற 2 கல்லூரி மாணவர்கள் பலி!
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள சிறுமாங்காடு கிராமத்தில், நுங்கு பறிக்க முயன்ற போது மின்சாரம் தாக்கி இரண்டு கல்லூரி மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். அதே கிராமத்தைச் சேர்ந்த டில்லி கணேஷ் (17) மற்றும் தட்சிணா மூர்த்தி (17) ஆகிய இருவரும் அங்குள்ள பனை மரத்தில் நுங்கு பறித்துக் கொண்டிருந்தனர். அப்போது, பறித்த நுங்கு ஒன்று எதிர்பாராத விதமாக அருகில் இருந்த மின் மாற்றியில் (Transformer) சிக்கிக்கொண்டது.

மின் மாற்றியில் சிக்கிய நுங்கை எடுப்பதற்காக மாணவர்கள் இருவரும் இரும்புக் கம்பி ஒன்றைப் பயன்படுத்தியுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக இரும்புக் கம்பியில் மின்சாரம் பாய்ந்ததில், இருவர் மீதும் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே தூக்கி வீசப்பட்டனர். இதில் பலத்த காயமடைந்த இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். துடிப்பான இரண்டு மாணவர்கள் நுங்கு பறிக்கச் சென்ற இடத்தில் உயிரிழந்தது அந்த கிராமத்தையே சோகத்தில் மூழ்கடித்துள்ளது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்த மாணவர்களின் உடல்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காகக் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், விபத்து நடந்த விதம் குறித்துத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோடைக் காலத்தில் நுங்கு பறிக்கச் செல்லும் இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் மின்சாரக் கம்பிகள் மற்றும் மின் மாற்றிகள் அருகே எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
