பைக் மீது லாரி மோதி 2 கல்லூரி மாணவர்கள் பலி.. சென்னையில் சோகம்!
சென்னை பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பம் பகுதியில் நிகழ்ந்த சாலை விபத்தில், பைக் மீது லாரி ஏறியதில் இரண்டு கல்லூரி மாணவர்கள் சம்பவ இடத்திலேயே துடிதுடிக்க உயிரிழந்தனர்.
பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர்கள் நிர்மல் (19) மற்றும் சந்தோஷ் குமார் (18). நண்பர்களான இவர்கள் இருவரும் அப்பகுதியில் உள்ள கல்லூரியில் பயின்று வந்தனர். இருவரும் தங்களது மோட்டார் சைக்கிளில் சென்னீர்குப்பத்திலிருந்து பாரிவாக்கம் சிக்னல் பகுதியில் உள்ள ஒரு தேநீர் கடைக்குச் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்களுக்கு முன்னால் கோழிகளை ஏற்றிச் சென்ற லாரி மீது இவர்களது பைக் எதிர்பாராத விதமாக உரசியது. இதில் நிலைதடுமாறி இருவரும் சாலையின் நடுவே விழுந்தனர்.

துரதிர்ஷ்டவசமாக, பின்னால் வந்த லாரியின் சக்கரம் மாணவர்கள் இருவர் மீதும் ஏறி இறங்கியது. இதில் தலை நசுங்கிய நிலையில் நிர்மல் மற்றும் சந்தோஷ் குமார் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அதிகாலை நேரத்தில் நிகழ்ந்த இந்த கோர விபத்து அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தகவல் அறிந்து விரைந்து வந்த ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், மாணவர்களின் உடல்களை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காகப் போரூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தை ஏற்படுத்திய லாரியை ஓட்டி வந்த ராணிப்பேட்டையைச் சேர்ந்த நசீர் (39) என்பவரைப் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கல்லூரிக்குச் சென்று எதிர்காலக் கனவுகளுடன் இருந்த இரண்டு இளைஞர்கள், அதிகாலை நேரத்தில் டீ குடிக்கச் சென்றபோது விபத்தில் சிக்கி உயிரிழந்தது அவர்களது குடும்பத்தினர் மற்றும் சென்னீர்குப்பம் பகுதி மக்களிடையே ஈடுசெய்ய முடியாத சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
