போதை மறுவாழ்வு மையத்தில் வாலிபர் படுகொலை - ஊழியர்கள் 2 பேர் கைது!
காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு அடுத்த சக்கரா நகர் பகுதியில் இயங்கிவரும் தனியார் போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைப் பெற்று வந்த வாலிபர் ஒருவர், மறுவாழ்வு மைய ஊழியர்களால் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாங்காட்டில் உள்ள குறிப்பிட்ட அந்தத் தனியார் போதை மறுவாழ்வு மையத்தில் போதைப்பழக்கத்திற்கு அடிமையான நூறுக்கும் மேற்பட்டோர் தங்கிச் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த தையல் தொழிலாளி சிவாவின் மகன் நிசாந்த் (23) என்பவர், கடந்த நான்கு மாதங்களாக இங்குத் தங்கிச் சிகிச்சை பெற்று வந்தார்.

இதே மையத்தில் முன்னர் சிகிச்சைப் பெற்று குணமடைந்து, தற்போது அங்கேயே ஊழியர்களாக வேலை பார்த்து வருபவர்கள் பாபு (55) மற்றும் சிவகுமார் (57). சிகிச்சைப் பெற்று வந்த நிசாந்த், ஊழியர்களான பாபு மற்றும் சிவகுமாரை அடிக்கடி அவதூறாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால் வாலிபருக்கும் ஊழியர்களுக்கும் இடையே தொடர்ந்து வாக்குவாதமும் அடிக்கடி தகராறும் ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு நிசாந்தின் பேச்சால் கடும் ஆத்திரமடைந்த பாபு மற்றும் சிவகுமார் ஆகியோர், சமையலறையில் இருந்த கத்தியை எடுத்து வந்து நிசாந்தின் கழுத்தில் சரமாரியாகக் குத்தினர். இதில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்த வாலிபர், சம்பவ இடத்திலேயே துடிதுடித்துப் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்தக் கொடூர கொலை குறித்துத் தகவல் அறிந்த மாங்காடு காவல்துறையினர் உடனடியாக விரைந்து வந்து, உயிரிழந்த நிசாந்தின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இக்கொலை வழக்கில் தொடர்புடைய பாபு மற்றும் சிவகுமார் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இதே போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைப் பெற்று வந்த முப்பதுக்கும் மேற்பட்டோர் காவலாளியைத் தாக்கிவிட்டுத் தப்பியோடிய சம்பவம் குறிப்பிடத்தக்கது.
