பயங்கரம்... அமெரிக்காவில் 2 போர் விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து!
அமெரிக்காவின் இடாஹோ மாகாணத்தில் உள்ள மவுண்டன் ஹோம் விமானப்படை தளத்தில் "கன்ஃபைட்டர் ஸ்கைஸ்" என்ற புகழ்பெற்ற வான்வெளி சாகச நிகழ்ச்சி நேற்று (மே 17) நடைபெற்றது. இந்த விறுவிறுப்பான நிகழ்ச்சியைக் காண்பதற்காகத் தளத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டிருந்தனர். அப்போது வான்வெளியில் சாகசங்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அமெரிக்கக் கடற்படைக்குச் சொந்தமான 2 அதிநவீன போர் விமானங்கள் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.
விமானங்கள் மோதிய அடுத்த சில விநாடிகளில் அவை தீப்பற்றி எரியத் தொடங்கித் தரையை நோக்கி வேகமாகப் பாய்ந்தன. அப்போது அந்த இரண்டு போர் விமானங்களுக்குள் இருந்த 4 விமானிகளும் தங்களது சமயோசித புத்தியால் விமானத்தில் இருந்து உடனடியாக வெளியேறினர். அவர்கள் அனைவரும் தங்களது பாராசூட்டுகள் மூலமாகப் பத்திரமாகத் தரையிறங்கி உயிர் தப்பினர். இதனால் அங்கு கூடியிருந்த மக்கள் மத்தியில் ஏற்பட்டிருந்த மாபெரும் பயமும் பதற்றமும் தற்பொழுது நீங்கியுள்ளது.

விபத்துக்குள்ளான 2 போர் விமானங்களும் தரைமட்டமாகி முற்றிலும் எரிந்து சாம்பலாகின. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புக் குழுவினர், விபத்தால் ஏற்பட்ட தீயை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் பொதுமக்களுக்கோ அல்லது விமானப்படை ஊழியர்களுக்கோ எவ்வித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை. இந்த விபத்து தொடர்பான நேரடி வீடியோ காட்சிகள் தற்பொழுது இணையதளப் பக்கங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
