பைக் மீது லாரி மோதிய விபத்தில் நண்பர்கள் 2 பேர் பலி.. விழுப்புரத்தில் சோகம்!
விழுப்புரம் அருகே முத்தாம்பாளையம் புறவழிச்சாலையில் லாரி மோதிய கோர விபத்தில் தனியார் நிறுவன ஊழியர்களான இரு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் சிந்தாமணி பகுதியைச் சேர்ந்த நரேஷ் (22) மற்றும் அருண்குமார் (23) ஆகிய இரு இளைஞர்களும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த நெருங்கிய நண்பர்களாவர். இவர்கள் இருவரும் வழக்கம்போல் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் முத்தாம்பாளையம் புறவழிச்சாலை பகுதியில் இரும்பு பிளேட்டுகளை ஏற்றி வந்த லாரி எதிர்பாராதவிதமாக இவர்கள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தின் கொடூரமான தாக்குதலில் நரேஷ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

பலத்த காயமடைந்து உயிருக்குப் போராடிய அருண்குமாரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் அவரும் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுநரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
