துக்க வீட்டிற்கு மாலை வாங்கச் சென்ற நண்பர்கள் 2 பேர் விபத்தில் பலி!

 
விபத்து விபத்து

விழுப்புரம் அருகே துக்க வீட்டிற்கு மாலை வாங்கிக் கொண்டு மோட்டார் சைக்கிளில் திரும்பிய போது, நிலைதடுமாறி டிராக்டர் மீது மோதிய விபத்தில், ஹெல்மெட் அணியாமல் வந்த இளம் நண்பர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதி கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொலை தற்கொலை வெட்டி மரணம் விபத்து

விழுப்புரம் அருகே உள்ள செம்மேடு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அய்யனார் மற்றும் சரவணன். சிறுவயது முதலே இணை பிரியாத நண்பர்களான இவர்கள் இருவரும், தங்களது உறவினர் ஒருவரின் மரண செய்தி கேட்டு துக்க வீட்டிற்குச் செல்லத் திட்டமிட்டுள்ளனர். அதன்படி, துக்க வீட்டிற்கு எடுத்துச் செல்வதற்காக அருகில் உள்ள கடைக்குச் சென்று ஈமமாலை ஒன்றை வாங்கிக்கொண்டு, தங்களது மோட்டார் சைக்கிளில் செம்மேடு நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தனர்.

இளைஞர்கள் இருவரும் ஹெல்மெட் எதுவும் அணியாமல் அதிவேகமாகப் பைக்கில் வந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது சாலையின் திருப்பம் ஒன்றில் எதிர்பாராத விதமாக முன்னால் சென்ற டிராக்டரின் பின்புறத்தில் இவர்களது பைக் வேகத்தில் மோதியது. இந்த பயங்கர விபத்தில் பைக் சுக்குநூறாக நொறுங்கியதுடன், தலையில் பலத்த காயமடைந்த அய்யனார் மற்றும் சரவணன் ஆகிய இருவரும் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர்.

பைக் விபத்து

விபத்து குறித்துத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விழுப்புரம் போலீசார், உயிரிழந்த இரு இளைஞர்களின் உடல்களையும் மீட்டுப் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த இருவரும் சிறுவயது முதலே ஒன்றாக வளர்ந்த நண்பர்கள் என்பதால், அவர்களின் இந்தத் திடீர் மரணம் செம்மேடு கிராமத்தையே ஒட்டுமொத்தமாகப் பெருஞ்சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.