'டாக்ஸிக்' திரைப்பட விழாவில் ஸ்பீக்கர் சரிந்து விபத்து - 2 பேர் படுகாயம்!
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நடைபெற்ற கன்னட நடிகர் யாஷ் நடிக்கும் ‘டாக்ஸிக்’ திரைப்பட விழாவில், ராட்சத ஸ்பீக்கர் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்தனர்.
நடிகர் யாஷ் நடிப்பில் உருவாகி வரும் 'டாக்ஸிக்' திரைப்படத்திற்கான சிறப்பு விழா ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்று வந்தது. விழாவில் நடிகர் யாஷ் மேடையில் ரசிகர்களிடையே பேசிக் கொண்டிருந்தபோது, மேடையின் அருகே அமைக்கப்பட்டிருந்த மிகப்பெரிய ஒலிபெருக்கி எதிர்பாராதவிதமாகத் திடீரெனச் சரிந்து விழுந்தது. இந்த விபத்தில் அங்கு நின்றுகொண்டிருந்த 2 பேர் படுகாயமடைந்தனர். மேலும் 10-க்கும் மேற்பட்டோர் லேசான காயங்களுக்கு உள்ளாகினர்.

காயமடைந்த அனைவரையும் படக்குழுவினரும் காவல்துறையினரும் உடனடியாக மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். நடிகர் யாஷ் பேசிக் கொண்டிருந்த தருணத்திலேயே இந்த விபத்து நிகழ்ந்ததால், விழாவில் சிறிது நேரம் பெரும் பரபரப்பும் கூச்சலும் நிலவியது.
