அரசுப் பேருந்து மீது கார் மோதி 2 பேர் உயிரிழப்பு... தேனியில் கொடூரம்!

 
கார்

தேனி புதிய பேருந்து நிலையம் அருகே அதிவேகமாக வந்த கார், அரசுப் பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானதில் நிதி நிறுவன உரிமையாளர் உட்பட இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தேனி புதிய பேருந்து நிலையம் அருகே 3 பேருடன் சென்ற கார், முன்னால் சென்ற வாகனத்தை முந்திச் செல்ல முயன்றுள்ளது. அப்போது எதிரே குமுளியில் இருந்து வந்த அரசுப் பேருந்து மீது மோதிய கார், கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே இருந்த தடுப்புச் சுவரிலும் பயங்கரமாக மோதி நொறுங்கியது. அமச்சியாபுரம் பகுதியில் பைனான்ஸ் தொழில் நடத்தி வந்த முத்துக்குமார் (50) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த அரண்மனைபுதூரைச் சேர்ந்த வேலுச்சாமி (55), மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

விபத்து

காரில் பயணித்த கந்தவேலு (52) என்பவர் படுகாயங்களுடன் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காவல்துறையினர் உடல்களை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.