மேலூர் அருகே கோர விபத்து: தண்ணீர் லாரி பின்னால் கார் மோதி 2 பேர் பலி!

 
விபத்து விபத்து

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே, உறவினர் ஒருவரின் இறுதிச் சடங்கில் பங்கேற்க வெளிநாட்டிலிருந்து வரும் சொந்தங்களை அழைத்து வர மதுரை விமான நிலையம் நோக்கிச் சென்ற கார், கோர விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் ஒரே பெயரைக்கொண்ட இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். முன்னேற்பாடு இன்றி சாலையின் நடுவே நிறுத்தப்பட்டிருந்த தண்ணீர் லாரி இந்த உயிரிழப்புகளுக்குக் காரணமாக அமைந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விபத்து மரணம் கொலை  தற்கொலை

சிங்கம்புணரி அருகே உள்ள ஜெயங்கொண்டம் நிலையைச் சேர்ந்த ராகவன் மகன் பிரதீப் (28) மற்றும் தமிழரசன் மகன் பிரதீப் (28) ஆகிய இருவரும் உறவினர்கள். இன்று காலை உறவினர் ஒருவரை அழைத்து வர கரண் (25) என்பவரது காரில் மதுரை நோக்கிப் புறப்பட்டுள்ளனர். மேலூர் அருகே தெற்கு தெரு பகுதியில் கார் சென்று கொண்டிருந்தபோது, சாலையின் தடுப்புச் சுவர் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுவதற்காக லாரி ஒன்று முன்னெச்சரிக்கை அறிவிப்புகள் ஏதுமின்றி வலது புறத்தில் நிறுத்தப்பட்டிருந்தது.

விபத்து

எதிர்பாராத விதமாக லாரியின் பின்பக்கத்தில் கார் பயங்கரமாக மோதியதில், காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இந்த இடிபாடுகளில் சிக்கி இரண்டு பிரதீப்களும் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். கார் ஓட்டுநர் கரண் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விதிமுறைகளை மீறி லாரியை நிறுத்திய ஓட்டுநர் செல்வம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.