மும்பை இசை நிகழ்ச்சியில் துயரம் - 2 பேர் அடுத்தடுத்து உயிரிழப்பு!
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள பிரபல அரங்கில் நடைபெற்ற பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியின் போது, அடுத்தடுத்து இரண்டு பேர் மர்மமான முறையில் உயிரிழந்த அதிர்ச்சிச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையின் வொர்லி பகுதியில் உள்ள புகழ்பெற்ற 'என்.எஸ்.சி.ஐ டோம்' அரங்கில் நேற்றிரவு பிரம்மாண்ட இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வார இறுதி நாள் என்பதால், இந்த இசை நிகழ்ச்சியைக் கண்டு ரசிப்பதற்காக மும்பையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான இசைப்பிரியர்களும், இளம் தலைமுறையினரும் அந்த அரங்கில் திரண்டிருந்தனர்.
இசை நிகழ்ச்சி அனல் பறக்கத் தொடங்கி, ஒட்டுமொத்த கூட்டமும் பாடல்களுக்கு ஏற்ப ஆடிக்கொண்டும், பாடிக்கொண்டும் உற்சாகமாகக் கொண்டாடிய தருணத்தில் தான் அந்த அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது.

நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த போது, கூட்டத்தில் இருந்த இரண்டு பேர் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு அடுத்தடுத்து மயங்கி விழுந்துள்ளனர். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அருகில் இருந்தவர்கள் மற்றும் அங்கிருந்த மருத்துவக் குழுவினர், உடனடியாக அவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அங்கு அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர்கள் இருவருமே ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அதிர்ச்சித் தகவலைத் தெரிவித்தனர்.
இசை நிகழ்ச்சியில் இருவர் பலியான சம்பவம், அங்கிருந்த மற்ற ரசிகர்களிடையே பெரும் சோகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தத் துயரச் சம்பவத்திற்கான துல்லியமான காரணம் இன்னும் அதிகாரப்பூர்வமாகக் கண்டறியப்படவில்லை.
அரங்கில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்களா? அல்லது மாரடைப்பு போன்ற வேறு ஏதேனும் உடல்நலக் கோளாறுகள் காரணமா? என்ற கோணத்தில் வொர்லி போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் உடற்கூறாய்விற்காக அனுப்பப்பட்டுள்ளன. அதன் அறிக்கை வெளியான பிறகே இந்த மர்ம மரணங்களுக்கான உண்மையான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
