பஞ்சாப் எல்லையில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு - துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி!

 
பஞ்சாப் எல்லை எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள்

பஞ்சாப் மாநிலம் தார்ன் தரன் மாவட்டத்தின் சர்வதேச எல்லை வழியாக இந்தியப் பகுதிக்குள் அத்துமீறி நுழைய முயன்ற இரண்டு ஊடுருவல்காரர்களை எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் சுட்டுக்கொன்றுள்ளனர். எல்லைப் பாதுகாப்புப் படையினரின் எச்சரிக்கையைப் பொருட்படுத்தாமல் தொடர் அத்துமீறலில் ஈடுபட முயன்றபோது இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மணிப்பூர் என்கவுண்டர் பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படை சுட்டுக்கொலை

பஞ்சாப் மாநிலம் தார்ன் தரன் எல்லைப் பகுதியில் எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் நேற்று வழக்கமான ரோந்து மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சர்வதேச எல்லையைக் கடந்து இந்திய எல்லைக்குள் இரகசியமாக நுழைய முயன்ற இரு நபர்களின் நடமாட்டம் வீரர்களின் கண்களில் பட்டது.

உடனடியாக உஷாரான பாதுகாப்புப் படையினர், அவர்களைப் பிடிப்பதற்காக எச்சரிக்கை விடுத்தனர். இருப்பினும், அந்த எச்சரிக்கையைப் புறக்கணித்துவிட்டு தொடர்ந்து அத்துமீறி முன்னேற முயன்றதால், பாதுகாப்பு வீரர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

பாதுகாப்பு படை

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதி முழுவதும் எல்லை பாதுகாப்புப் படையினரின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, பாதுகாப்புப் பல மடங்கு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. உயிரிழந்த நபர்கள் யார், அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் அல்லது பயங்கரவாத ஊடுருவல் முயற்சியில் ஈடுபட முயன்றனரா என்பது குறித்துப் புலனாய்வுத் துறையினர் மற்றும் பாதுகாப்புப் படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.