10 ஏக்கர் பரப்பளவில் 2 அடுக்கு பாதுகாப்பு... முதலமைச்சர் கரூர் நிகழ்ச்சியில் தொண்டர்கள், பொதுமக்களுக்கு தனித்தனி வழி!

 
விஜய் முதல்வர்

நாளை கரூர் மாவட்டத்தில் நடைபெறும் முக்கிய மக்கள் சந்திப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தமிழக முதலமைச்சர் விஜய் பங்கேற்க உள்ளார். இந்நிகழ்விற்காகக் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சுமார் 10 ஏக்கர் பரப்பளவிலான பிரம்மாண்ட மைதானத்தில் விரிவான உள்கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகமும் காவல் துறையும் செய்துள்ளன.

கடந்த காலக் கூட்ட நெரிசல் சம்பவங்களைக் கருத்தில் கொண்டும், முதலமைச்சரின் பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கிலும் மைதானம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.  நிகழ்ச்சி நடைபெறும் பிரதான மேடை மற்றும் அரங்கைச் சுற்றிலும் 2 அடுக்குகளாகப் பலத்த பாதுகாப்புத் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. காவல்துறையின் முறையான சோதனைக்குப் பிறகே பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் உள்ளே அனுமதிக்கப்பட உள்ளனர்.

விஜய் எம்.எல்.ஏ. தவெக

10,000 பேர் அமரக்கூடிய வசதியுள்ள ஜெர்மன் பந்தல் அரங்கில், பாதுகாப்பு விதிமுறைகளின்படி 5,000 பேருக்கு மட்டுமே நாற்காலி வசதிகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக 16 தனித்தனிப் பெட்டி போன்ற அமைப்புகள் உருவாக்கப்பட்டு மின்விசிறி வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

மைதானத்திற்குள் வரும் பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் எவ்விதக் குழப்பமுமின்றித் தங்களது இடங்களுக்குச் சென்று வர ஏதுவாக, மேடையை மையமாகக் கொண்டு பிரத்யேகப் போக்குவரத்து மற்றும் வழித்தட வரைபடம் உருவாக்கப்பட்டுள்ளது: அரங்கிற்குள் வரும் பொதுமக்கள் எவ்வித நெரிசலுமின்றி வரிசையாகச் சென்று அமரும் வகையில், மேடைக்கு வலதுபுறமாகப் பிரத்யேகப் பாதைகளும் இருக்கை அமைப்புகளும் உருவாக்கப்பட்டுள்ளன.

விஜய்

மைதானத்திற்குள் வந்து செல்லவும், நிகழ்ச்சி முடிந்த பிறகு கூட்ட நெரிசலின்றி வெளியேறவும் ஏதுவாகத் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு எனத் தனித்தனியாக 2 பிரதான நுழைவு மற்றும் வெளியேறும் வழிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேடைக்கு மிக அருகே இடதுபுறத்தில் முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது பாதுகாப்புப் வாகனங்கள் நேரடியாக வந்து செல்வதற்கான தனிப் பிரத்யேகப் பாதை அமைக்கப்பட்டு, அது காவல்துறையின் முழு முழுக் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளது.

நாளை காலை 8 மணி முதலே பொதுமக்கள் அரங்கிற்குள் அனுமதிக்கப்பட உள்ள நிலையில், காலை 11 மணிக்கு முதலமைச்சர் விஜய் பொதுமக்களை நேரில் சந்தித்துக் கோரிக்கை மனுக்களைப் பெற உள்ளார். இந்த 10 ஏக்கர் மைதானத்தில் செய்யப்பட்டுள்ள போக்குவரத்து ஒழுங்குமுறைகள் மற்றும் தனித்தனி வழித்தட அமைப்புகள் காரணமாகக் கரூரில் நாளை போக்குவரத்து நெரிசல் இன்றி நிகழ்ச்சி சுமுகமாக நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.