கடலூர் அருகே பிரபல ரவுடி சுட்டுப்பிடிப்பு - தாக்குதலில் 2 காவலர்கள் காயம்!

 
கடலூர் ரவுடி

கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே ரவுடிகளுக்கிடையே ஏற்பட்ட கொலையில் தொடர்புடைய பிரபல ரவுடி கோபியை, காவலர்களைத் தாக்கியதால் போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்.

நெய்வேலி அருகே ரவுடிகளுக்கு இடையே ஏற்பட்ட முன்விரோத மோதலில் நரேஷ் என்பவர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய பிரபல ரவுடி கோபியைப் பிடிக்கக் காவல்துறையினர் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

ரவுடி கோபியைப் பிடிக்க முயன்றபோது, அவர் தப்பிப்பதற்காகத் தன் வைத்திருந்த அரிவாளால் தாக்கியதில் 2 காவலர்கள் பலத்த காயமடைந்தனர். தற்காப்பிற்காகவும், குற்றவாளியைக் கட்டுப்படுத்தவும் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தி கோபியைச் சுட்டுப் பிடித்தனர்.

துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த ரவுடி கோபி மற்றும் காயமடைந்த இரண்டு காவலர்களும் சிகிச்சைக்காகக் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.