திருவண்ணாமலையில் தடுப்பு வேலியில் பைக் மோதி சென்னையைச் சேர்ந்த 2 மாணவர்கள் பலி!
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே பைக் விபத்தில் சிக்கி சென்னையைச் சேர்ந்த கிருத்திக், பிரியதர்ஷன் ஆகிய இரண்டு கல்லூரி மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
சென்னையில் இருந்து சென்ற கிருத்திக் மற்றும் பிரியதர்ஷன் ஆகிய இருவரும் சுற்றுலா முடித்துவிட்டு நேற்று பிற்பகலில் பைக்கில் சென்னை திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது போளூர் அருகே சென்று கொண்டிருந்த போது, அவர்களுக்கு முன்னால் சென்ற மற்றொரு பைக் திடீரெனத் திரும்பியுள்ளது. இதனால் நிலைதடுமாறிய இவர்களின் பைக் எதிர்பாராதவிதமாகச் சாலையின் தடுப்பு வேலியில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் பலத்த காயமடைந்த இரு மாணவர்களும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த வடவணக்கம்பாடி போலீசார் மாணவர்களின் உடல்களை மீட்டுப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்ததுடன், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
