2 சீட்டு விசிக முதல் அமைச்சரவை வரை... வரலாறு படைத்த தொல்.திருமாவளவன்!
தமிழக அரசியல் வரலாற்றில் இன்று ஒரு மிக முக்கியமான மைல்கல் எட்டப்பட்டுள்ளது. பல தசாப்தங்களாகத் தமிழக அரசியல் களம் கண்டுவந்த ஒற்றைக்கட்சி ஆட்சி முறைக்கு மாற்றாக, தவெக தலைமையிலான புதிய அரசில் கூட்டணிக் கட்சிகளும் அமைச்சரவையில் அதிகாரப்பூர்வமாகப் பங்கெடுத்துள்ளன. இதில், "ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு" என்ற முழக்கத்தை முதன்முதலில் தீவிரமாக முன்வைத்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக), புதிய அமைச்சரவையில் இணைந்து தனது நீண்டகால அரசியல் கனவை நனவாக்கியுள்ளது.
விசிக-வின் அடித்தளம் என்பது வெறும் தேர்தல் அரசியலுக்காக மட்டும் உருவானதல்ல; அது ஒரு வலுவான சமூகப் போராட்டக் களம். மதுரையில் மலைச்சாமி என்பவரால் தலித் மக்களின் உரிமைகளுக்காகத் தொடங்கப்பட்ட 'தலித் சிறுத்தைகள்' என்ற அமைப்பே இக்கட்சியின் ஆரம்பப் புள்ளியாகும்.

மலைச்சாமியின் மறைவுக்குப் பிறகு, 1990 ஆம் ஆண்டில் இந்த அமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்ற தொல்.திருமாவளவன், ஒடுக்கப்பட்ட மக்கள் மட்டுமன்றி ஒட்டுமொத்தத் தமிழர்களின் விடுதலைக்காகவும் போராடும் நோக்கில், அதற்கு 'விடுதலைச் சிறுத்தைகள்' எனப் பெயர் மாற்றம் செய்தார்.
ஆரம்பக் காலத்தில் தேர்தல் அரசியலைப் புறக்கணித்து வந்த விசிக, 1999 ஆம் ஆண்டிற்குப் பிறகே நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் நேரடியாகக் களம் காணத் தொடங்கியது.
தமிழகத்தின் 13 ஆவது சட்டமன்றத் தேர்தலில் (2006) திமுக கூட்டணியில் இடம்பெற்ற விசிக, முதன்முறையாக 2 தொகுதிகளில் (மங்களூர் மற்றும் காட்டுமன்னார்கோவில்) வெற்றி பெற்றுத் தனது சட்டமன்றப் பயணத்தைத் தொடங்கியது. இரண்டு தொகுதிகளில் மட்டுமே வென்றதைச் சுட்டிக்காட்டி, அரசியல் எதிரிகளால் "2 சீட்டு விசிக" என்று இக்கட்சி பலமுறை மேடைகளிலும் சமூக வலைத்தளங்களிலும் மிகக் கடுமையாகக் கேலி செய்யப்பட்டது.

திமுக மற்றும் அதிமுக என மாறி மாறி இரு திராவிடக் கட்சிகளின் கூட்டணிகளிலும் விசிக நீடித்து வந்தாலும், தேர்தல் வெற்றிகளைத் தாண்டி "மக்களுக்கான கொள்கைகளைச் சட்டமாக்க வேண்டுமானால், நாமும் அதிகாரத்தின் உச்சமான அமைச்சரவையில் அமர வேண்டும்" என்பதில் திருமாவளவன் உறுதியாக இருந்தார்.
தற்பொழுது தமிழகத்தில் ஏற்பட்டுள்ள புதிய அரசியல் மாற்றத்தின் விளைவாக, முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசில் விசிக அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது.
அரசியல் களத்தில் தங்களுக்கு நேர்ந்த அத்தனை விமர்சனங்களையும், கேலிகளையும் தங்களின் பொறுமையாலும், தொடர் மக்கள் போராட்டங்களாலும் முறியடித்து, இன்று தமிழக அமைச்சரவையில் விசிக-வின் பிரதிநிதிகள் அமைச்சர்களாகப் பதவியேற்றுள்ளது அக்கட்சியின் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய சாதனையாக மாறியுள்ளது.
