அமெரிக்காவின் 2 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன - மாயமான அமெரிக்க விமானியைப் பிடித்தால் சன்மானம் - ஈரான் அறிவிப்பு!

 
ஈரான் போர் விமானம் அமெரிக்கா ஈரான் போர் விமானம் அமெரிக்கா

கடந்த பிப்ரவரி 28-ம் தேதி ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளுக்கு எதிராக ஈரான் தனது பதிலடித் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, நேற்று அமெரிக்காவின் இரண்டு போர் விமானங்கள் ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன.

ஈரான் வான் எல்லைக்குள் நுழைந்த அமெரிக்காவின் அதிநவீன எப்-15 (F-15) ரகப் போர் விமானத்தை ஈரான் ராணுவம் ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தியது. அந்த விமானத்தில் இருந்த இரண்டு விமானிகளும் பாராசூட் மூலம் குதித்துத் தப்பினர். அவர்களில் ஒருவரை அமெரிக்க மீட்புப் படையினர் மீட்டுள்ளனர்.

அமெரிக்கா ஈரான்

மாயமான மற்றொரு விமானியை உயிருடனோ அல்லது சடலமாகவோ பிடித்துக் கொடுத்தால் பெரும் தொகை சன்மானமாக வழங்கப்படும் என்று ஈரான் அரசு அறிவித்துள்ளது.

அதேபோல், உலக வர்த்தகப் பாதையான அரபிக்கடல் ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்காவின் ஏ-10 (A-10) ரகப் போர் விமானத்தையும் ஈரான் சுட்டு வீழ்த்தியுள்ளது. இதில் பயணித்த விமானியின் நிலை என்ன என்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வத் தகவல்கள் வெளியாகவில்லை.

ஈரான் அமெரிக்கா போர் ட்ரம்ப்

எப்-15 விமானியை மீட்பதற்காக அனுப்பப்பட்ட அமெரிக்காவின் இரண்டு பிளாக் ஹாக் ஹெலிகாப்டர்களையும் ஈரான் ராணுவம் சுட்டு வீழ்த்தியதாகத் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மீட்புப் பணியின் போது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் அமெரிக்க ராணுவ வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த அடுத்தடுத்த சம்பவங்களால் மத்திய கிழக்கு நாடுகள் முழுவதும் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன. அமெரிக்காவின் போர் விமானங்களை வீழ்த்தியதன் மூலம், ஈரான் தனது ராணுவ வலிமையை உலகிற்குப் பறைசாற்றியுள்ளது. மாயமான விமானியை மீட்க அமெரிக்கா கூடுதல் படைகளை அனுப்பியுள்ளதால், எந்த நேரத்திலும் பெரிய அளவிலான மோதல் வெடிக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது.