மகாராஷ்டிராவில் தீ விபத்தில் 2 பெண்கள் பலி – 6 பேர் மருத்துவமனையில் அனுமதி!
மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தில் உள்ள நலாசோபாரா பகுதியில் அமைந்துள்ள உயர்தரக் குடியிருப்பு கட்டிடத்தில் நேற்று நள்ளிரவில் திடீரென ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் இரண்டு பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். அதிக அளவில் கரும்புகை வெளியேறியதால் ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாகவே இந்த உயிரிழப்பு நேர்ந்திருக்கலாம் என முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவத்தில் மேலும் பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் உள்ள நலாசோபாராவில் 'இம்பீரியல் ஹைட்ஸ்' என்ற பெயரில் 14 மாடிகளைக் கொண்ட பிரம்மாண்டமான குடியிருப்பு கட்டிடம் செயல்பட்டு வருகிறது. இக்கட்டிடத்தின் ஒரு பகுதியில் நேற்று நள்ளிரவு நேரத்தில் திடீரென மளமளவெனத் தீப்பற்றிக் கொண்டது. தீ விபத்து ஏற்பட்டவுடன் கட்டிடத்தின் பல பகுதிகளிலும் நச்சுப் புகையானது வேகமாகப் பரவியுள்ளது.
நள்ளிரவு நேரம் என்பதால் பெரும்பாலானோர் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தனர். இதனால் என்ன நடக்கிறது என்று தெரியாமல் குடியிருப்புவாசிகள் அதிர்ச்சியும் பீதியும் அடைந்தனர். உடனடியாகத் தீயணைப்புத் துறைக்குத் தகவல் கொடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, தீயணைப்பு வீரர்களும் மீட்புக்குழுவினரும் மிக விரைவாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

இந்த கோர விபத்தில் சிக்கி ஃபல்குனி ஷா (50) மற்றும் அஸ்வினி பார்க்கர் (50) ஆகிய இரு பெண்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். கட்டிடத்தில் தீ பரவியதை அடுத்து வெளியேற முடியாத சூழலில், அதிக அளவில் நச்சுப் புகையைச் சுவாசித்ததால் ஏற்பட்ட கடுமையான மூச்சுத்திணறல் மற்றும் ஒவ்வாமை காரணமாகவே இவர்கள் உயிரிழந்திருக்கக்கூடும் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
தீயணைப்பு வீரர்களின் துரிதமான மற்றும் சாதுரியமான நடவடிக்கையின் காரணமாக, கட்டிடத்தில் சிக்கியிருந்த சுமார் 25-க்கும் மேற்பட்டோர் பத்திரமாக மீட்கப்பட்டுப் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். எனினும், புகையைச் சுவாசித்து உடல்நலக் குறைவு மற்றும் தீக்காயங்களால் பாதிக்கப்பட்ட மேலும் 6 பேர் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். நள்ளிரவில் குடியிருப்புப் பகுதியில் ஏற்பட்ட இந்த திடீர் தீ விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
