"2 ஆண்டுகள் வலியும் வேதனையும் நிறைந்தது" - சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய்!

 
விஜய்

தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரின் இறுதி நாளான இன்று, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் விஜய், தங்களது அரசியல் பயணம் மற்றும் கடந்து வந்த பாதைக் குறித்து மிகவும் உருக்கமாகவும் உணர்வுப்பூர்வமாகவும் உரையாற்றினார். "கட்சி தொடங்கிய இரண்டே ஆண்டுகளில் மிக எளிதாகத் தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்துவிட்டார்கள்" என விமர்சிப்பவர்களுக்குத் தனது பேச்சின் மூலம் அவர் விரிவான விளக்கமளித்தார்.

சட்டப்பேரவையில் இன்று உரையாற்றிய முதலமைச்சர் விஜய், தவெக சந்தித்த சவால்களைப் பட்டியலிட்டார். "வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு நாங்கள் மிகக் குறுகிய காலத்தில், எளிதாக இந்த இடத்திற்கு வந்துவிட்டது போலத் தோன்றலாம். ஆனால், கடந்த 2 ஆண்டு காலம் எனக்குப் பெரும் வலியும், வேதனையும் நிறைந்ததாகவே இருந்தது. அரசியல் களத்தில் எங்களது இயக்கத்தின் வளர்ச்சியைத் தடுக்கப் பல்வேறு தரப்பிலிருந்தும் எண்ணற்ற சூழ்ச்சிகளும், முட்டுக்கட்டைகளும், மறைமுகத் தாக்குதல்களும் தொடுக்கப்பட்டன. அத்தனையையும் தாங்கி, தவிடுபொடியாக்கிவிட்டுத் தான் சாமானிய மக்களின் ஆதரவோடு இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை எங்களது இயக்கம் பெற்றுள்ளது" என்று அவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், இந்த இரண்டு ஆண்டு கால வேதனைகளும், சவால்களும்தான் தங்களை இன்னும் வலிமையாக்கியுள்ளதாகத் தெரிவித்தார். அரசியல் ரீதியாகப் பல விமர்சனங்களை எதிர்கொண்டாலும், தமிழக மக்களின் நலனை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு தவெக அரசு செயல்படும் என்றார்.

"மக்களுக்காக உழைக்க வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தில் மட்டுமே இத்தனை வலிகளையும் கடந்து வந்துள்ளோம். தமிழக மக்கள் எங்களின் மீது வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கையை இந்த அரசு எந்தச் சூழலிலும் முழுமையாகக் காப்பாற்றும்" என முதலமைச்சர் விஜய் தனது பதிலுரையில் நெகிழ்ச்சியுடன் உறுதிபடத் தெரிவித்தார்.