உகாண்டாவில்பள்ளிப் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து 20 மாணவர்கள் உயிரிழப்பு!
கிழக்கு உகாண்டா பகுதியில் பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற சுற்றுலாப் பேருந்து ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாகப் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 15 வயதிற்குட்பட்ட 20 பள்ளி மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
உகாண்டாவில் உள்ள பள்ளி ஒன்றில் இருந்து மாணவர்களைக் கல்விச் சுற்றுலாவுக்காக பேருந்து ஒன்றில் அழைத்துச் சென்றுள்ளனர். கிழக்கு உகாண்டா மலைப்பாதையின் வளைவு ஒன்றில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து அசுர வேகத்தில் அருகில் இருந்த ஆழமான பள்ளத்தில் பாய்ந்து கவிழ்ந்தது. பேருந்து கவிழ்ந்து நசுங்கிய விபத்தில், அதில் பயணித்த 15 வயதிற்குட்பட்ட 20 சிறுவர்கள் சம்பவ இடத்திலேயே தங்களது உயிரை விட்டனர்.
விபத்து குறித்துத் தகவல் அறிந்ததும் உள்ளூர் மக்களும், மீட்புக் குழுவினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேருந்தின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த மாணவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் படுகாயமடைந்த மேலும் பல மாணவர்கள் மீட்கப்பட்டு, ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் அவசரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கல்விச் சுற்றுலா சென்ற இடத்தில் 20 பிஞ்சுயிர்கள் பலியான இந்தச் சோகச் சம்பவம் உகாண்டா நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து பேருந்தின் அதிவேகம் காரணமாக நடந்ததா அல்லது ஏதேனும் இயந்திரக் கோளாறு காரணமா என்பது குறித்து அந்நாட்டுப் போக்குவரத்து மற்றும் காவல் துறை அதிகாரிகள் தற்பொழுது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
