குலசை முத்தாரம்மன் தசரா திருவிழா - 200 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் நடைபெறும் தசரா திருவிழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
அக்டோபர் 19ம் தேதி முதல் அக்டோபர் 21ம் தேதி வரை 3 நாட்களுக்கு தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்தும் குலசேகரப்பட்டினத்திற்கு இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் திருநெல்வேலி மண்டல நிர்வாகம் அறிவித்துள்ளது.

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் இந்த ஆண்டுக்கான தசரா திருவிழா கடந்த அக்டோபர் 11ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
விழாவில் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபடுவது வழக்கம். இதையொட்டி, பக்தர்கள் கோவிலுக்குச் சென்று திரும்புவதற்கு வசதியாக சிறப்புப் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

தசரா தொடர் விடுமுறையை முன்னிட்டும் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அக்டோபர் 16ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை திருநெல்வேலி, தென்காசி, சங்கரன்கோவில், திருச்செந்தூர், தூத்துக்குடி, கோவில்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சென்னை, கோவை, திருப்பூர், மதுரை, திருச்சி போன்ற நகரங்களுக்குச் செல்ல 300 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.எனவே, தசரா திருவிழாவுக்குச் செல்லும் பக்தர்களும், தொடர் விடுமுறையில் வெளியூர்களுக்குப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிடுபவர்களும் இந்தச் சிறப்புப் பேருந்து வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
