2,000 கி.மீ. ஊரகச் சாலைகள் ரூ.2,550 கோடியில் மேம்பாடு - பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா 33 முக்கிய அறிவிப்புகள்!
சட்டப்பேரவையில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தமிழகத்தில் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் 33 புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
மாநிலம் முழுவதும் ஆண்டுதோறும் 2,000 கி.மீ. ஊரகச் சாலைகளைத் தரம் உயர்த்த ரூ.2,550 கோடியில் 'ஊரகப்பகுதி சாலைகள் மேம்பாட்டுத் திட்டம்' செயல்படுத்தப்படும்.
சென்னை, கோவை மற்றும் தூத்துக்குடி நகரங்களை இணைக்கும் வகையில் அதிநவீன தொழில்தட விரைவுச்சாலை உருவாக்கப்படும். சென்னை, ஆவடி, தாம்பரம், திருச்சி, கோவை, மதுரை, தூத்துக்குடி ஆகிய மாநகராட்சிகளில் ரூ.1,000 கோடியில் 500 கி.மீ. சாலைகள் மேம்படுத்தப்படும்.
சாலைகளைச் சீரான முறையில் பராமரிக்கும் வகையில் ரூ.250 கோடியில் 'சீரான சாலைகள் திட்டம்' அமல்படுத்தப்படும்.
சென்னை சென்ட்ரல் - கத்திப்பாரா - கோயம்பேடு முக்கோண வழித்தடச் சாலைகள் மற்றும் பல்லாவரம் - துரைப்பாக்கம் சாலைகள் ரூ.400 கோடியில் மேம்படுத்தப்படும். அடுத்த 10 ஆண்டுகளுக்கான உள்கட்டமைப்புத் தேவைகளைக் திட்டமிட 'தமிழ்நாடு நெடுஞ்சாலை பெருந்திட்டம்' தயாரிக்கப்படும்.
மும்பை - நவிமும்பை கடல் இணைப்புச் சாலை போன்று, சென்னை - மாமல்லபுரம் - புதுச்சேரியை இணைக்கும் 'கடல்வழி உயர்மட்டச் சாலைத் தொடர்' கட்டம் கட்டமாக உருவாக்கப்படும். சென்னை - மாமல்லபுரம் - புதுச்சேரி இடையே பயணிகள் படகுப் போக்குவரத்து சேவை தொடங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
ராமேசுவரம் அக்னித் தீர்த்தத்தில் இருந்து பாம்பன் கால்வாய் வழியாக மண்டபம் வரை பயணிகள் படகு சேவை தொடங்கப்படும். இந்தியா - இலங்கை இடையிலான உறவுகளை மேம்படுத்தும் நோக்கில் நாகப்பட்டினம் - காங்கேசன்துறை இடையிலான படகுப் போக்குவரத்து சேவைகள் விரிவுபடுத்தப்படும்.
கலங்கரை விளக்கம் முதல் அடையாறு திரு.வி.க பாலம் வரை உயர்மட்டச் சாலை அமைக்கப்படும். வடசென்னையில் வியாசர்பாடி ரயில்வே மேம்பாலம் நீட்டிக்கப்படும் மற்றும் பேசின்பிரிட்ஜ் பகுதியில் உள்ள குறுகிய பாலங்கள் அகலப்படுத்தப்படும்.
பாடி - திருநின்றவூர் உயர்மட்டச் சாலை: சென்னை - திருத்தணி சாலையில் பாடி முதல் திருநின்றவூர் வரை உயர்மட்டச் சாலை அமைக்கப்படும்.
தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள் விரைவுபடுத்தல்: சென்னை - கன்னியாகுமரி 8 வழிச்சாலை, திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் மற்றும் கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு உயர்மட்டச் சாலைப் பணிகள் விரைவுபடுத்தப்படும்.

ரூ.500 கோடியில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பக் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, போக்குவரத்து விதிமீறல்களைக் கண்டறிதல், சாலைப் பாதுகாப்பு, அவசர சிகிச்சை மையங்கள் மற்றும் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்படும்.
அரசுப் பணி வாய்ப்புக்காகக் காத்திருக்கும் பொறியியல் பட்டதாரிகளுக்குப் பொதுப்பணித்துறை ஒப்பந்தங்களில் சலுகையுடன் வாய்ப்புகள் வழங்கப்படும்.
ரூ.200 கோடிக்கும் அதிகமான அரசு கட்டிடப் பணிகளை மேற்கொள்ள ரூ.1 கோடி தொகுப்பு நிதியுடன் 'தமிழ்நாடு உள்கட்டமைப்பு மற்றும் கட்டுமான நிறுவனம்' நிறுவப்படும். சென்னை தொடக்கக் கிலோமீட்டர் புள்ளியில், தமிழ்நாடு நெடுஞ்சாலைகள் தொடக்கப் புள்ளியைக் குறிக்கும் வகையில் நினைவுத்தூண் அமைக்கப்படும்.
