தமிழகத்தில் 20,000 மின்சார வாகன சார்ஜிங் அமைப்பு.. ரூ.50,000 நிதியுதவி!
தமிழகத்தில் அதிகரித்து வரும் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையிலும், அதற்கான உள்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையிலும் புதிய தவெக அரசு தனது தேர்தல் அறிக்கையில் பல்வேறு அதிரடியான நிதியுதவித் திட்டங்களை அறிவித்திருந்தது. 2031-ஆம் ஆண்டிற்குள் தமிழகத்தை மின்சார வாகனப் பயன்பாட்டில் முதன்மை மாநிலமாக மாற்றுவதை இலக்காகக் கொண்டு இந்த வாக்குறுதிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
மின்சார வாகன ஓட்டிகளின் மிகப்பெரிய கவலையான சார்ஜிங் உள்கட்டமைப்புப் பற்றாக்குறைக்கு முற்றுப்புள்ளி வைக்க தவெக இலக்கு நிர்ணயித்துள்ளது. வரும் 2031-ஆம் ஆண்டிற்குள் தமிழகம் முழுவதும் முக்கிய நெடுஞ்சாலைகள், நகரங்கள் மற்றும் கிராமப் புறங்களை இணைக்கும் வகையில் 20,000 அதிவேக மின்சார வாகன சார்ஜிங் (Fast Charging) நிலையங்கள் அமைக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.

நகர்ப்புறங்களில் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள் தங்களது மின்சார வாகனங்களை சார்ஜ் செய்வதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களைத் தீர்க்க இந்தச் சிறப்பு நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது. அடுக்குமாடி குடியிருப்புகளில் பொதுவான EV சார்ஜிங் உள்கட்டமைப்புகளை உருவாக்கும் குடியிருப்போர் நலச் சங்கங்களுக்கு திட்டச் செலவில் 50 சதவிகிதம் அல்லது அதிகபட்சமாக ரூ.50,000 வரை அரசு தரப்பில் மானியமாக நிதியுதவி வழங்கப்படும்.
மின்சார வாகனங்களின் வருகையால் பாரம்பரிய பெட்ரோல்/டீசல் வாகன மெக்கானிக்குகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக் கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு இந்தத் தொலைநோக்குத் திட்டம் சேர்க்கப்பட்டுள்ளது. பாரம்பரிய மெக்கானிக்குகள் தங்களது திறனை மேம்படுத்தி, நவீன 'EV மெக்கானிக்குகளாக' மாறுவதற்குத் தேவையான அதிநவீனப் பயிற்சிகள் வழங்கப்படும். இந்தப் பயிற்சியைப் பெற்றுப் புதிய தொழில் தொடங்க ஏதுவாக ஒவ்வொரு மெக்கானிக்கும் ரூ.10,000 நிதியுதவி வழங்கப்படும்.

தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய தவெக அரசின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் மற்றும் 2026-2027 ஆம் நிதி ஆண்டிற்கான முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் ஜூலை முதல் வாரத்தில் கூடவுள்ள சூழலில், சுற்றுச்சூழல் பாதுகாப்பை மேம்படுத்தும் இந்த இவி கொள்கை சார்ந்த அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக நிதி ஒதுக்கீட்டுடன் செயல்பாட்டிற்கு வரும் என வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துள்ளனர்.
