கனடாவில் 2 லட்சம் பேருக்கு நிரந்தரக் குடியுரிமை வாய்ப்பு – யாருக்கெல்லாம் இந்தத் திட்டத்தில் பலன்?!
கனடாவில் ஏற்கெனவே வசித்து வரும் தற்காலிகக் குடியிருப்பாளர்கள் உள்ளிட்ட குறிப்பிட்ட பிரிவினருக்கு நிரந்தரக் குடியுரிமை வழங்குவதற்கான சிறப்புத் திட்டத்தை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் 2027-ம் ஆண்டு இறுதிக்குள் அதிகபட்சம் 2 லட்சம் பேர் நிரந்தரக் குடியிருப்புத் தகுதி பெற வாய்ப்புள்ளது.
இந்தத் திட்டம் இரண்டு பிரிவுகளாகச் செயல்படுத்தப்பட உள்ளது. முதல் பிரிவில், கனடாவில் பணிபுரிந்து வரும் தகுதியான 1 லட்சம் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு நிரந்தரக் குடியிருப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மாகாணங்களின் தொழிலாளர் தேவைகளுக்கு ஏற்ப விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இரண்டாவது பிரிவில், மனிதாபிமான அடிப்படையில் நீண்டகாலமாகக் காத்திருப்பவர்கள், உக்ரைன் மற்றும் ஹாங்காங் தொடர்பான குறிப்பிட்ட குடியேற்றப் பாதைகளில் உள்ளவர்கள், தகுதி பெற்ற குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்டோரின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும். இதற்காக மேலும் 1 லட்சம் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அனைத்து தற்காலிகக் குடியிருப்பாளர்களுக்கும் தானாக PR கிடையாது. அரசு அறிவித்துள்ள குறிப்பிட்ட தகுதிகள் மற்றும் குடியேற்றப் பாதைகளின் அடிப்படையிலேயே விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும்.
