2026-27 கல்வியாண்டு: பள்ளிகளுக்கு மொத்தம் 155 நாட்கள் லீவு; 210 நாட்கள் வேலை நாட்கள்!
தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்குமான 2026-27-ஆம் கல்வியாண்டிற்கான அதிகாரப்பூர்வ நாட்காட்டியைத் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இந்த புதிய நாட்காட்டியின்படி, நடப்பு கல்வியாண்டில் ஒட்டுமொத்தமாக உள்ள 365 நாட்களில் 210 நாட்கள் வேலை நாட்களாகவும், 22 அரசு விடுமுறை நாட்கள் உட்பட மொத்தம் 155 நாட்கள் விடுமுறை நாட்களாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.
மாணவர்களின் கல்விச் சுமையைக் குறைக்கும் வகையில், இந்த கல்வியாண்டில் பெரும்பாலான சனிக்கிழமைகள் விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், பாடத்திட்டங்களை முறைப்படி முடிப்பதற்காக ஜூலை 19, செப்டம்பர் 19, டிசம்பர் 19 ஆகிய 3 சனிக்கிழமைகள் மட்டும் விதிவிலக்காகப் பள்ளி வேலை நாட்களாகச் செயல்படும்.
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களின் கல்விப் பணிகளை முன்கூட்டியே திட்டமிடுவதற்கு வசதியாகக் காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வுத் தேதிகளும், அதற்கான விடுமுறை விபரங்களும் நாட்காட்டியில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

காலாண்டுத் தேர்வு செப்டம்பர் 17-ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 25-ஆம் தேதி வரை நடைபெறும். காலாண்டு விடுமுறை செப்டம்பர் 26-ஆம் தேதி முதல் அக்டோபர் 4-ஆம் தேதி வரை மொத்தம் 9 நாட்கள் காலாண்டு விடுமுறை அளிக்கப்படும். அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 16-ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 23-ஆம் தேதி வரை நடத்தப்படும். அரையாண்டு விடுமுறை டிசம்பர் 24-ஆம் தேதி முதல் ஜனவரி 3-ஆம் தேதி வரை மொத்தம் 11 நாட்கள் அரையாண்டு விடுமுறை விடப்படும். புத்தாண்டு விடுமுறைகள் முடிந்து ஜனவரி 4-ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும்.
இந்த கல்வியாண்டில் சில முக்கியப் பண்டிகைகள் வார இறுதி நாட்களை ஒட்டி வருவதால், மாணவர்களுக்குத் தொடர் விடுமுறைப் கிடைக்கின்றன. செப்டம்பர் 4 (வெள்ளி) கிருஷ்ண ஜெயந்தி வருவதால் சனி, ஞாயிறுடன் சேர்த்து 3 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கும். அதேபோல, செப்டம்பர் 14 (திங்கள்) விநாயகர் சதுர்த்தி வருவதால் அதற்கு முந்தைய வார இறுதியுடன் சேர்த்து 3 நாட்கள் லீவு கிடைக்கும்.
அக்டோபர் 19, 20 ஆகிய தேதிகளில் (திங்கள், செவ்வாய்) ஆயுத பூஜை & விஜயதசமி பண்டிகைகள் வருவதால், சனிக்கிழமை முதல் தொடர்ந்து 4 நாட்கள் நீண்ட விடுமுறை அமைகிறது.
இந்த ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி தீபாவளிப் பண்டிகை ஞாயிற்றுக்கிழமை வருவதால், வார விடுமுறையோடு சேர்த்து 2 நாட்கள் மட்டுமே விடுமுறை தினமாக இருக்கும். தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை ஜனவரி 15 முதல் 17 வரை வெள்ளி, சனி, ஞாயிறு என வருவதால் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை வழங்கப்படுகிறது.

இந்த 2026-27-ஆம் கல்வியாண்டிற்கான கடைசிப் பள்ளி வேலை நாள் 2027 ஏப்ரல் 23-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. அதன் தொடர்ச்சியாக, மாணவர்களுக்கான கோடை விடுமுறை 2027 ஏப்ரல் 24-ஆம் தேதி முதல் தொடங்கும் எனப் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
அதே நேரத்தில், 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரசுப் பொதுத்தேர்வு தேதிகள் மற்றும் இதர வகுப்புகளுக்கான முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் ஆகியவை பின்னர் தனியாக அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறையான நாட்காட்டி வெளியீடு, பள்ளிகள் தங்களின் கல்வித் திட்டங்களைச் சீராகச் செயல்படுத்தப் பெரிதும் உதவியாக இருக்கும்.
