2026 வேதியியலுக்கான நோபல் பரிசு ஹென்றி காகன், கென்சோ சோயி 2 பேருக்கு பகிர்ந்தளிப்பு!
2026-ம் ஆண்டுக்கான வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த வேதியியலாளர் ஹென்றி பி. காகன் மற்றும் ஜப்பானைச் சேர்ந்த கென்சோ சோயி ஆகிய இருவருக்கும் இந்த ஆண்டுக்கான உயரிய விருது கூட்டாக வழங்கப்பட்டுள்ளது.வேதியியலில் முக்கியத்துவம் வாய்ந்த ‘அசிமெட்ரிக் ஆர்கானிக் சின்தசிஸ்’ எனப்படும் சமச்சீரற்ற கரிமத் தொகுப்பு துறையில் அவர்கள் மேற்கொண்ட ஆய்வுகள் மற்றும் கண்டுபிடிப்புகளுக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, வேதியியல் எதிர்வினைகளில் ஏற்படும் ‘Non-linear Effects’ மற்றும் ‘Autocatalysis’ தொடர்பான அவர்களின் முக்கியமான கண்டுபிடிப்புகளை அங்கீகரிக்கும் வகையில் நோபல் பரிசு வழங்கப்படுவதாக நோபல் குழு தெரிவித்துள்ளது.இயற்கையில் காணப்படும் பல மூலக்கூறுகள் ஒன்றுக்கொன்று கண்ணாடியில் தெரியும் பிரதிபலிப்புகளைப் போன்ற இரண்டு வடிவங்களில் இருக்கக்கூடும். இவற்றில் உயிரினங்களுக்கு தேவையான குறிப்பிட்ட வடிவம் மட்டும் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. இந்த வேதியியல் சமச்சீரின்மை எவ்வாறு உருவானது என்பது நீண்ட காலமாக விஞ்ஞானிகளுக்கு முக்கியமான கேள்வியாக இருந்து வந்தது.

ஹென்றி காகன் மற்றும் கென்சோ சோயியின் ஆய்வுகள், இந்த நிகழ்வை புரிந்துகொள்வதில் முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளன. குறிப்பாக, ஒரு குறிப்பிட்ட வடிவிலான மூலக்கூறை உருவாக்கும் வேதியியல் செயல்முறைகளை கட்டுப்படுத்துவதில் அவர்களின் கண்டுபிடிப்புகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.
ஹென்றி பி. காகன் பிரான்சில் உள்ள Université Paris-Sud உடன் தொடர்புடையவர். கென்சோ சோயி ஜப்பானில் உள்ள Tokyo University of Science-ல் பணியாற்றியுள்ளார். இருவரின் ஆய்வுகளும் நவீன கரிம வேதியியலின் வளர்ச்சியில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2026-ம் ஆண்டுக்கான வேதியியல் நோபல் பரிசின் மொத்த தொகையான 12 மில்லியன் ஸ்வீடிஷ் குரோனா இருவருக்கும் பகிர்ந்து வழங்கப்படுகிறது. நோபல் பரிசு வழங்கும் விழா டிசம்பர் 10-ம் தேதி ஸ்டாக்ஹோமில் நடைபெற உள்ளது.
