இயற்பியலுக்கான நோபல் பரிசு பெல்ஜியம் விஞ்ஞானிக்கு ! ‘Ghost Particles’ ஆய்வுக்கு கவுரவம்
2026-ம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு பெல்ஜியத்தில் பிறந்த இயற்பியலாளர் பிரான்சிஸ் ஹால்சனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தென் துருவத்தில் அமைக்கப்பட்டுள்ள IceCube Neutrino Observatory மூலம் உயர் ஆற்றல் நியூட்ரினோக்களை ஆய்வு செய்ததற்காக இந்த உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது.
ஸ்வீடனில் உள்ள ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயின்சஸ் சார்பில் இன்று அறிவிக்கப்பட்ட இந்த விருது, பிரான்சிஸ் ஹால்சனின் நீண்டகால அறிவியல் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் அமைந்துள்ளது. குறிப்பாக IceCube நியூட்ரினோ ஆய்வகத்துக்கு அவர் செய்த தீர்க்கமான பங்களிப்பும், விண்வெளி சார்ந்த உயர் ஆற்றல் நியூட்ரினோக்களை கண்டறிந்ததும் நோபல் பரிசுக்கான முக்கிய காரணங்களாக தெரிவிக்கப்பட்டுள்ளன.

நியூட்ரினோக்கள் மிகவும் குறைந்த அளவில் பொருளுடன் தொடர்பு கொள்ளும் துணை அணுத் துகள்களாகும். இதனால் அவற்றை கண்டறிவது விஞ்ஞானிகளுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்து வருகிறது. இவை பூமியையும் மனித உடலையும் கூட பெரும்பாலும் எந்தவித தடையும் இல்லாமல் கடந்து செல்லக்கூடியவை என்பதால், பொதுவாக ‘Ghost Particles’ என அழைக்கப்படுகின்றன.
தென் துருவத்தில் உள்ள மிகத் தூய்மையான பனிக்கட்டியை நியூட்ரினோக்களை கண்டறியும் கருவியாக பயன்படுத்தலாம் என்ற யோசனையை ஹால்சன் முன்வைத்தார். இதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட IceCube ஆய்வகம், சுமார் ஒரு கன கிலோமீட்டர் பரப்பளவிலான பனிக்கட்டிக்குள் பொருத்தப்பட்டுள்ள சென்சார்கள் மூலம் நியூட்ரினோ தொடர்புகளை பதிவு செய்கிறது.

இந்த ஆய்வின் மூலம் தொலைதூர விண்வெளியில் நடைபெறும் சக்திவாய்ந்த நிகழ்வுகள் குறித்து விஞ்ஞானிகள் புதிய தகவல்களை அறிந்து கொள்ள முடிகிறது. குறிப்பாக உயர் ஆற்றல் நியூட்ரினோக்கள் உருவாகும் விண்வெளிச் சூழல்களைப் புரிந்து கொள்ள IceCube முக்கிய பங்கு வகிக்கிறது.
பெல்ஜியத்தில் பிறந்த 82 வயதான பிரான்சிஸ் ஹால்சன் தற்போது அமெரிக்காவின் விஸ்கான்சின்-மேடிசன் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகிறார். அவருக்கு 2026 இயற்பியலுக்கான நோபல் பரிசாக 12 மில்லியன் ஸ்வீடிஷ் குரோனர் வழங்கப்படுகிறது.இந்த ஆண்டு நோபல் பரிசு அறிவிப்புகளில் இயற்பியலுக்கான விருது இரண்டாவது அறிவிப்பாகும். வேதியியல், இலக்கியம், அமைதி உள்ளிட்ட பிரிவுகளுக்கான விருதுகள் தொடர்ந்து அறிவிக்கப்பட உள்ளன.
