'சிங்கப்பெண்' அதிரடிப் படை அதிரடி மூலம் 2,032 புகார்கள் மீது நடவடிக்கை - 187 வழக்குகள் பதிவு!

 
சிங்கப்பெண்

தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் தொடங்கப்பட்ட 'சிங்கப்பெண்' சிறப்பு அதிரடிப் படை, மாநிலம் முழுவதும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு சாதனை படைத்து வருகிறது. கடந்த ஜூன் 10-ஆம் தேதி தனது பணியைத் தொடங்கிய இந்தப் படையின் மூலம், ஒன்றரை மாதத்தில் 187 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தமிழகக் காவல் துறை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

சிங்கப்பெண் அதிரடிப் படைக்குக் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் வரப்பெற்ற 346 புகார்களுக்கு உடனடியாகத் தீர்வு காணப்பட்டுள்ளது. 28 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. காணாமல் போன 6 பெண்கள் மற்றும் 14 குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட்டுக் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

சிங்கப்பெண்

அறிவுசார் குறைபாடுடைய 14 நபர்கள் மீட்கப்பட்டு மறுவாழ்வு மையங்களில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஒரு குழந்தைத் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டதுடன், பள்ளியிலிருந்து நின்ற 51 குழந்தைகள் மீண்டும் கல்வியைத் தொடர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் 3,580 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, 9,397 முக்கிய இடங்களில் தீவிர ரோந்துப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மொத்தம் 2,032 புகார்கள் மீது துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு, 187 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. காணாமல் போன 96 பெண்களும் குழந்தைகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். 22 குழந்தைத் திருமணங்கள் உரிய நேரத்தில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. பள்ளியிலிருந்து பாதியில் நின்ற 169 குழந்தைகள் கண்டறியப்பட்டு மீண்டும் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சிங்கப்பெண் அதிரடிப்படை

அறிவுசார் குறைபாடுடைய 57 நபர்களுக்குத் தேவையான மறுவாழ்வு உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. குற்றங்கள் நடைபெற வாய்ப்புள்ளதாகக் கண்டறியப்பட்ட 58,346 இடங்களில் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்துப் பணிகள் திறம்பட மேற்கொள்ளப்பட்டுள்ளன.