ஒரே நாளில் 4 ரயில்களில் 21.5 கஞ்சா, போதைப்பொருட்கள் பறிமுதல்... சேலத்தில் பரபரப்பு!

 
போதைப்பொருள் போதை கஞ்சா

ஆந்திரா, ஒடிசா மற்றும் பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களில் இருந்து தமிழ்நாடு மற்றும் கேரளா நோக்கி இயக்கப்படும் ரயில்களில் கஞ்சா மற்றும் குட்கா போன்ற தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் கடத்தப்படுவதைத் தடுப்பதற்காக ரயில்வே தனிப்படை காவல்துறையினர் தீவிரக் கண்காணிப்பு மற்றும் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக சேலம் வழியாகச் சென்ற நான்கு வெவ்வேறு ரயில்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் சுமார் 21.5 கிலோ அளவிலான கஞ்சா மற்றும் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்திற்கு வந்தடைந்த தன்பாத் - ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயிலில் காவல்துறையினர் நடத்திய சோதனையின்போது, முன்பதிவில்லாப் பெட்டியின் கழிவறை அருகே கேட்பாரற்று இருந்த ஒரு பையைக் கைப்பற்றிச் சோதித்தனர். அதற்குள் ஏழு பிளாஸ்டிக் பார்சல்களில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த 10 கிலோ கஞ்சா கண்டெடுக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. காவல்துறை சோதனையிடுவதை அறிந்த கடத்தல் நபர்கள் அங்கிருந்து தப்பியோடியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

கஞ்சா

சாலிமர் - நாகர்கோவில் குருதேவ் எக்ஸ்பிரஸ்  ரயிலில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், முன்பக்கப் பொதுப் பெட்டியின் கழிவறைப் பகுதி அருகே கிடந்த பையில் இருந்து 6 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுப் பறிமுதல் செய்யப்பட்டது.

திப்ரூகர் - கன்னியாகுமரி விரைவு ரயில் மற்றும் சில்சார் - கோயம்புத்தூர் விரைவு ரயில்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் முறையே 2 கிலோ கஞ்சாவும், 3.5 கிலோ போதை மற்றும் புகையிலைப் பொருட்களும் கைப்பற்றப்பட்டன.

கஞ்சா கடத்தல்

சேலம் வழியாகச் சென்ற இந்த நான்கு ரயில்களில் நடத்தப்பட்ட சோதனைகளின் முடிவில் மொத்தம் 21.5 கிலோ அளவிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் 18 கிலோ கஞ்சாவும், 3.5 கிலோ புகையிலைப் பொருட்களும் அடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட அனைத்துப் பொருட்களும் சேலம் ரயில்வே காவல் ஆய்வாளர் திலகவதியிடம் ஒப்படைக்கப்பட்டன. 

வட மாநிலங்களில் இருந்து தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மற்றும் கேரளாவுக்குச் செல்லும் ரயில்களைக் குறிவைத்து இத்தகைய கடத்தல்களில் ஈடுபட்டு வரும் மர்ம நபர்கள் யார் என்பது குறித்தும், இதன் பின்னணியில் உள்ள வலைப்பின்னல் குறித்தும் ரயில்வே காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.